

கன்னியாகுமரி மாவட்டம் களியாக்கவிளை சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
களியாக்காவிளை எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய தவுபீக், அப்துல் ஷமீம் ஆகியோருக்குப் பணப் பரிவர்த்தனை செய்ய உதவியதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ராமநாதபுரம் அடுத்த தேவிப்பட்டிணத்தில் மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது போலீஸாரிடம் இருந்து ஷேக் தாவூத் என்பவர் தப்பி ஓடினார். அவரை ராமநாதபுரம் அடுத்த சித்தார்கோட்டை மீனவ கிராமத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவரை தேவிப்பட்டிணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைகள் முடிக்கப்பட்டு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் விரைவில் ராமநாதபுரம் மாவட்டச் சிறையில் அடைக்கப்படுவார் எனத் தெரிகிறது.
இதற்கிடையில், தவுபீக், அப்துல் ஷமீம் ஆகியோர் போலீஸ் காவல் முடிந்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.