

கிண்டி காந்திமண்டபம் படேல் பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பொறியாளர் மீது குப்பை லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார்.
சென்னை திருவல்லிக்கேணியில் வசித்தவர் அனுஜ் பாண்டே(26). உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். பெற்றோர்கள் சிறுவயதிலேயே சென்னை வந்துவிட்டனர். திருவல்லிக்கேணியில் வசித்து வந்த பாண்டே மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு நிஸ்ஸான் கார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவருக்கு ஒரு மூத்த சகோதரர் உள்ளார்.
அனுஜ் பாண்டே நேற்று மாலை தனது பல்சர் மோட்டார் சைக்கிளில் கிண்டிலிருந்து அடையாறு நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தைத் தாண்டி படேல் சாலை மேம்பாலத்தில் ஏறியுள்ளார்.
பாலத்தின்மீது அனுஜ் பாண்டே சென்றபோது எதிரே பாலத்தின்மீது வேகமாக வந்த சென்னை மாநகராட்சி ஒப்பந்த குப்பை லாரி அவர்மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அனுஜ் பாண்டே பலியானார். லாரியை ஓட்டி வந்த கடலூரைச் சேர்ந்த வரதன் (55)என்பவர் மது அருந்தியிருந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்தது.
விபத்துக்குறித்து தகவல் அறிந்து வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீஸார் அனுஜ் பாண்டே உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுபோதையில் வந்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது பிரிவு 304(2)( உயிரிழப்பு ஏற்படும் என தெரிந்தும் அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்துதல்)பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அனுஜ் பாண்டே பற்றி அவரது உறவினர்கள் கூறுகையில் அவர் மிகவும் கஷடப்பட்ட குடும்பத்தில் வளர்ந்தவர், நன்றாக படித்து மெல்ல மெல்ல வாழ்க்கையின் நல்ல நிலையை அடையும் நேரத்தில் இப்படி எமனாக மதுபோதை லாரிடிரைவரால் உயிர்போய் விட்டது என்று வருந்தினர்.
எப்போதும் ஹெல்மட் இல்லாமல் வெளியில் செல்ல மாட்டார், ஆனால் விபத்து நடந்தபோது ஏன் ஹெல்மட் அணியவில்லை என்று தெரியவில்லை என்று தெரிவித்தார்.