

‘பிக்பாஸ்’ புகழ் தர்ஷன் நிச்சயம் செய்துவிட்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுத்து அவதூறு கிளப்பி மிரட்டுவதாக நடிகை ஷனம் ஷெட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார்.
தமிழ்,தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஷனம் ஷெட்டி. ஏராளமான மாடலிங் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபகாலமாக சிம்புவுடன் இணைந்து 'மகா' படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக 'கதம் கதம்', 'சதுரம் 2' உள்ளிட்ட சில தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஷனம் ஷெட்டியுடன் மாடலிங் படப்பிடிப்புகளின் போது தர்ஷன் நெருக்கமாகியுள்ளார். இலங்கையை பிறப்பிடமாக கொண்ட தர்ஷன் தமிழகத்தில் பல மாடலிங் படங்களில் நடித்தார். பின்னர் ‘பிக்பாஸ்’ சீசன் 3-ல் பங்கேற்றதால் தர்ஷனும் மிகப்பிரபலம் ஆனார். சீசன் 3-ல் மக்களால் அதிகம் விரும்பப்பட்டவர். டைட்டில் வெல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டவர்.
இந்நிலையில் இருவரும் திருமணம் செய்வது பிக்பாஸ் நிகழ்ச்சியால் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆகியும் தர்ஷன் திருமணத்துக்கு மறுப்பதாக தெரிவித்து ஷனம் ஷெட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார்.
பின்னர் வெளியே வந்த அவர் கூறியதாவது:
கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் காதலித்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு மே மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் ஜூன் மாதம் திருமணமும் நடக்க முடிவு செய்திருந்த நிலையில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தொடங்கியதால் நிகழ்ச்சி முடிந்த பின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்.
மேலும் நமக்கு நிச்சயம் நடந்தது பற்றி வெளியில் கூறினால் பெண்கள் ரசிக்க மாட்டார்கள் என தர்ஷன் கூறினார். தர்ஷன் வெளிநாட்டில் ஷூட்டிங் சம்மந்தமாக செல்வதற்கு ரூ.15 லட்சம் வரை நான் செலவழித்தேன். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷனுக்கு வாய்ப்பு கிடைக்கவும் பலவகைகளில் உதவி புரிந்தேன்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பு என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார், அவரது பெற்றோரும் அதற்கு உடந்தை. சிங்கப்பூரில் உள்ள தர்ஷன் ஊருக்குச் சென்று பார்த்து கேட்டபோது என்னை மிரட்டி அனுப்பினார்கள். மேலும் என்னுடைய வளர்ச்சிக்கு பாதிப்பு உண்டாகும் வகையில் என்னைப்பற்றி பொய்யான கருத்துகளை தர்ஷன் பரப்பி வருகிறார்.
தர்ஷனின் நண்பர் மற்றும் தர்ஷன் இணைந்து என்னை மிரட்டுகிறார்கள். அதனால் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் தர்ஷன் மீது நம்பிக்கை மோசடி,கொலை மிரட்டல் உட்பட வழக்குகளின் கீழ் புகார் கொடுத்துள்ளேன், இந்தப் புகார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது”
என ஷனம் ஷெட்டி தெரிவித்தார்.