Published : 30 Jan 2020 03:26 PM
Last Updated : 30 Jan 2020 03:26 PM

பாஜக பிரமுகர் கொலை தனிப்பட்ட விரோதத்தால் மட்டுமே நடந்தது: திருச்சி காவல் ஆணையர் வரதராஜு பேட்டி

திருச்சி பாஜக பிரமுகர் விஜயரகு கொலை முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது. மற்றபடி இதற்கு கலர் பூசும் விவகாரம் எதுவும் இல்லை என திருச்சி காவல் ஆணையர் வரதராஜு தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடையே காவல் ஆணையர் வரதராஜு அளித்த பேட்டி:

''ஹரிபிரசாத், பாபு (எ) மிட்டாய் பாபு இருவரும் சென்னை பூக்கடையில் கைது செய்யப்பட்டு நேற்று மாலை திருச்சி கொண்டு வரப்பட்டனர். இங்கு வந்தவுடன் அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் சுடர்வேந்தன், சச்சின்(எ) சஞ்சய், யாசர் ஆகிய 5 பேரும் சதித்திட்டம் தீட்டி, கடந்த 27-ம் தேதி அதிகாலை 6 மணி அளவில் பாபு என்கிற மிட்டாய் பாபு என்பவர் விஜயரகு மீது கொண்டிருந்த தனிப் பகை காரணமாக கொலை செய்துள்ளார்.

கொலைக்குப் பின் தஞ்சாவூர் வழியாக தப்பிச் சென்றுள்ளனர். இன்று தனிப்படையினர் 3 பேரைக் கைது செய்துள்ளனர். மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் விஜயரகு மற்றும் அவர் வசித்து வந்த வரகனேரி பென்ஷனர்ஸ் தெருவான அதே பகுதியில் வசித்து வந்த பாபு (எ) மிட்டாய் பாபு என்பவருக்கும் சமீப மாதங்களாக இருந்து வந்த தனிப்பட்ட பகை காரணமாகவும், குடும்பத்துடன் இருந்த தனிப்பட்ட முன் விரோதம் காரணமாகவும் நடந்துள்ளது.

வேறு மோட்டிவ் இல்லை. இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்''.

இவ்வாறு காவல் ஆணையர் வரதராஜு பேட்டி அளித்தார்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் அளித்த பதில்:

இது லவ் ஜிகாத் என தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் கூறியுள்ளாரே?

இந்தக் கொலை தனிப்பட்ட முன் விரோதம் காரணமாகத்தான் நடந்துள்ளது. அவ்வளவுதான் சொல்ல முடியும். மற்றவை விசாரணையில் உள்ளன.

தனிப்பட்ட விரோதம் என்றால் வேறு யாரும் இருக்கிறார்களா? என்ன காரணம்?

தனிப்பட்ட விரோதம் மட்டுமே. மேலும் யாராவது சம்பந்தப்பட்டுள்ளார்களா? என்பது விசாரணையில் தெரியவரும். இதில் கொலை நடந்த இடத்தில் மிட்டாய் பாபு, ஹரிபிரசாத் ஆகிய இருவரும் இருந்துள்ளனர்.

மற்ற 3 பேரும் சதித்திட்டம் தீட்டியபோது உடனிருந்து உதவியவர்கள். 2 பேர் நாகப்பட்டினம் தப்பிச் சென்றனர். தற்போது 5 பேரையும் பிடித்துவிட்டோம்.

அவர் பெயர் மிட்டாய் பாபுதானா?

ஆமாம். பள்ளிச் சான்றிதழிலேயே பாபு என்றுதான் உள்ளது.

எச்.ராஜா இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரிகளைக் குறை சொல்லி பேட்டி அளித்துள்ளாரே?

நான் வழக்கு குறித்து மட்டுமே பேச முடியும். மற்ற விஷயங்களுக்குள் செல்ல விரும்பவில்லை. பல்வேறு தரப்பில் பல விஷயங்கள் பேசினார்கள். அதுகுறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. புலன் விசாரணை முழுமையாக நடத்தியபோது வந்த விவரம் பற்றி மட்டுமே சொல்கிறேன்.

கடந்த ஓராண்டாகவே வரகனேரி பகுதியில் வசித்து வந்த மிட்டாய் பாபு என்பவருக்கும், விஜயரகு அவரது உறவினர் கிருஷ்ணகுமார் என்பவருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. அதன் தொடர்ச்சியாக இந்தக் கொலை நடந்துள்ளது. மற்றபடி இதற்கு கலர் பூசும் விவகாரம் எதுவும் இல்லை.

இதில் யாசர் என்பவர்மீது பல வழக்குகள் உள்ளன. பாபு மீது பல வழக்குகள் உள்ளன. இவர் குண்டர் சட்டத்தில் 2019-ல் சிறையில் அடைக்கப்பட்டவர்.

இவ்வாறு திருச்சி காவல் ஆணையர் வரதராஜு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x