

குழந்தைகளின் ஆபாசப் படங்களை மொபைலில் வைத்திருந்ததாக வட மாநில இளைஞர் ஒருவர் கரூரில் கைது செய்யப்பட்டார்.
ஆபாச வலைதளங்களைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியர்கள் அதிகம் என்கிற ஆய்வும், தமிழகம் அதில் முன்னேறிய இடத்தில் உள்ளது என்கிற அதிர்ச்சி செய்தியும் வெளியானது. இதையடுத்து 120-க்கும் மேற்பட்ட ஆபாச வலைதளங்களை மத்திய அரசு முடக்கியது. குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படங்களைப் பார்ப்பதோ, தரவிறக்கம் செய்வதோ, அதை மற்றவர்களுக்குப் பகிர்வதோ கடுமையான குற்றமாகும்.
ஆபாச வலைதளங்களில் குறிப்பாக குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் காணொலிகள் பரப்பப்படுவதும், அதற்கென பெரிய அளவில் மறைமுகச் சந்தை இருப்பதும், இதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதும் பெரிய பிரச்சினையாக மாறி வந்தது.
இவ்வாறு நடந்தவர்களின் பெரிய பட்டியலை ஐபி முகவரியுடன் அமெரிக்க உளவு அமைப்பு மத்திய அரசுக்கு அனுப்ப அது தமிழக போலீஸாருக்கும் வந்தது. ஐபி எண்ணை வைத்து அதுபோன்ற செயலில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறியும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர்.
இதில் ஐபி எண் மூலம் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், குழந்தைகள் ஆபாசப் படங்களை மொபைலில் வைத்திருந்ததாக வட மாநில இளைஞர் ஒருவர் கரூரில் கைது செய்யப்பட்டார்.
கரூர் வையாபுரி நகரில் உள்ள சலூன் ஒன்றில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நியாஸ் அலி (23) என்ற இளைஞர், சிகை திருத்தும் கலைஞராகப் பணியாற்றி வந்தார். இவர் கடந்த மே மாதம் அவரது மொபைல் போனில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் வைத்திருந்ததாகவும், அவற்றை ஆன்லைன் மொபைல் ஆப் மூலம் பரப்ப வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து குழந்தைகளைத் தவறாக பயன்படுத்துதல் கண்காணிப்பு தேசிய மையம் கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரா.பாண்டியராஜனுக்கு நேற்று (ஜன.29) ஆன்லைனில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் கரூர் நகர போலீஸார் போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் நியாஸ் அலியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.