Last Updated : 29 Jan, 2020 09:00 PM

 

Published : 29 Jan 2020 09:00 PM
Last Updated : 29 Jan 2020 09:00 PM

ரூ.2 லட்சம் பணத்துடன் மாயமான பேக்கரி உரிமையாளர் கொலை: பாகூர் அருகே காரினுள் உடல் மீட்பு

புதுச்சேரி அருகே ரூ.2 லட்சம் பணத்துடன் மாயமான நித்தியானந்தாவின் தீவிர பக்தரான பேக்கரி உரிமையாளர் கொலை செய்து காரினுள் சடலமாக வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் வஜ்ரவேல் (51). இவர், வில்லியனூர் பைபாஸ் சாலையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இதே போல் ஏம்பலம் சந்திப்பிலும் பேக்கரி கடை வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செம்பியம்பாளயத்தில் உள்ள உறவினர் ஒருவர் ரூ.2 லட்சம் பணம் கொடுப்பதாக கூறியிருந்தார்.
அதற்காக கடையில் இருந்து செம்பியம்பாளையத்துக்கு தனது காரில் சென்றுள்ளார்.

உறவினரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் வஜ்ரவேல் மனைவி வள்ளியம்மாள் அவரது போனை தொடர்பு கொண்ட போது தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

உடனே தனது உறவினர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். பிறகு எங்கு தேடியும் கிடைக்காததால் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று பாகூர் அடுத்த குருவிநத்தம் ராஜிவ் காந்தி மண்டபம் அருகே வஜ்ரவேலு கார் நிற்பதாக அவர்களது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது காரினுள் ஒருவர் பிணமாக கிடப்பது தெரியவந்தது. உடனே இது குறித்து பாகூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு சென்ற ஆய்வாளர் கவுதம் சிவகணேஷ், உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் காரை சோதனை செய்ததில், காரினுள் பிணமாக கிடந்தது வஜ்ரவேல் என்பதும், யாரோ மர்ம நபர்கள் அவரை கொலை செய்து, அவரது காரின் டிக்கியிலேயே அடைத்து வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

வேறு இடத்தில் அவரை கொலை செய்த மர்ம நபர்கள், அவரது ஆடைகளை கழற்றி நிர்வாண கோலத்தில் காரில் போட்டு, குருவிநத்தம் குடியிருப்புகள் நிரைந்த பகுதியில் வந்து காரை நிறுத்திவிட்டு சென்றிருப்பதும் தெரியவந்தது.

மேலும் காரினுள் பேக்கரிக்கு தேவையான கேக், பாதாம் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதும்,வஜ்ரவேல் எடுத்துச் சென்ற ரூ.2 லட்சம் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது. நித்யானந்தாவின் தீவிர பக்தரன இவர், புதுச்சேரி மாநிலத்தில் நித்யானந்தவின் ஆசிரமம் அமைப்பதற்கு இவரும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த சீனியர் எஸ்பி ராகுல் அல்வால், எஸ்பி ரங்கநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x