Published : 29 Jan 2020 12:07 PM
Last Updated : 29 Jan 2020 12:07 PM

இரவு உணவருந்தச் சென்ற 2 மணிநேரத்தில் துணிகரம்: பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 130 சவரன் நகை திருட்டு

சென்னை வளசரவாக்கத்தில் பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 130 சவரன் நகையைத் திருடிச் சென்றனர். உணவருந்த ஹோட்டலுக்கு குடும்பத்துடன் சென்ற 2 மணிநேர வித்தியாசத்தில் இந்தத் திருட்டு நடந்துள்ளது.

சென்னை வளசரவாக்கம் ராதாநகர், முதல் தெருவில் வசிப்பவர் ஆறுமுகம் (48). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சொந்தமாக வீடு வாங்கி இங்கு வசித்து வருகிறார். பிரபல கட்டுமான நிறுவனத்தில், கட்டுமானப் பொறியாளராக கடந்த 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.

நேற்று பணி முடித்து வந்த ஆறுமுகம், மனைவி சித்ரகலா (45) மற்றும் மகளுடன் வெளியில் சென்று உணவருந்த விரும்பினார். இதையடுத்து இரவு 9 மணி அளவில் வீட்டைப் பூட்டிக்கொண்டு 3 பேரும் ராமாபுரம், DLF எதிரில் உள்ள ஓட்டலுக்கு இரவு உணவு சாப்பிடச் சென்றனர். சாப்பிட்டுவிட்டு மீண்டும் வீட்டுக்கு இரவு 11.15 மணிக்குத் திரும்பி வந்தனர்.

வீட்டைத் திறக்க வந்த மூவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பிரதான கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது முன்கதவு மற்றும் இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, முதல் மாடியில் உள்ள மர பீரோவை உடைத்து, அதிலிருந்த 130 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வளசரவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர். வீட்டில் கண்காணிப்பு கேமரா இருக்கிறது. ஆனால், நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள் தாங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக சிசிடிவி கேமராவில் உள்ள பதிவு செய்யும் டிவிடியையும் உடைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.

ஆறுமுகம் வீட்டைத் தொடர்ந்து நோட்டமிட்ட யாரோ இந்த வேலையைச் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இரவு உணவருந்தச் சென்ற 9 மணியிலிருந்து 11 மணி வரை என இரண்டு மணிநேர இடைவெளியில் மர்ம நபர்கள் திருட்டுச் சம்பவத்தை நடத்தியுள்ளனர்.

ஆகவே, நோட்டமிட்டு அறிமுகமான நபர்களே திருட்டுச் சம்பவத்தை நடத்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x