

பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் நேற்று இருபிரிவினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் இருவர் உயிரிழந்தனர். இது குறித்து 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது கைலாசபட்டி. இங்கு இருபிரிவினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கஞ்சா விற்பது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததாக ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினர் மீது கோபத்தில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் ஒருவருக்கு ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொண்டதுடன், கற்களையும் வீசித் தாக்கினர். இதில் எதிரெதிர் தரப்பைச் சேர்ந்த பெருமாள், ஜெயபால் ஆகியோர் உயிரிழந்தனர்.
தென் மண்டல ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன், டிஐஜி.ஜோஷி நிர்மல்குமார், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் மோதலில் இறந்த ஜெயபாலின் மகன் கங்காதேவா கொடுத்த புகாரின் பேரில் முருகன், அன்பழகன், சுரேந்தர், நாகராஜ், ராதா, மனோஜ், அருள்முருகன், சிவக்குமார், அபிமன்யு உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதேபோல், மற்றொரு பிரிவைச் சேர்ந்த இறந்த பெருமாள் மகன் துரைப்பாண்டி புகாரின் பேரில் ஜெயபால், கங்காதேவா, சிவதேசிங்கன், முத்துப்பிரியா, கமலாதேவி, கார்த்திக், அஜித், சுதா உள்ளிட்ட 13 பேர் மீதும் தென்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் இருபி்ரிவினருக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் இருந்து வருவதால் போலீஸார் அதிகளவில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.