

கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஜாமீனில் உள்ள பேராசிரியை நிர்மலாதேவிக்கு பிடி ஆணை பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி தான் வேலை செய்த தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். அவரது கைதைத் தொடர்ந்து பேராசிரியர்கள் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதாகினர். இவர்கள் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்குத் தொடர்ந்து ஆஜராகாததால் நீதிபதி பரிமளா பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.
நிர்மலாதேவிக்கு ஏற்கெனவே நவம்பர் 18-ம் தேதி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனும் வழக்கிலிருந்து விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிர்மலாதேவி ஆஜராகாவிட்டாலும் வழக்கு விசாரணைக்காக பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி நீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆனார்கள். அதனையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.