

மது பாட்டிலை ஒளித்து வைத்ததாகக் கருதி, ஆத்திரமடைந்த தம்பி உடன் பிறந்த அக்காவை கத்தியால் குத்தினார். தடுக்க வந்த மருமகனையும் கத்தியால் குத்தினார். இதில் சிகிச்சை பலனின்றி அக்கா உயிரிழந்தார்.
சென்னை வளசரவாக்கம், வேலன் நகரில் வசித்தவர் தாரகேஷ்வரி (61). இவரது கணவர் இறந்துவிட்டார். இவருடன் இவரது தாயார் வேதநாயகி (80), மகன் அதிஷான் (31) உள்ளிட்ட 3 பிள்ளைகள் அவருடன் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் இலங்கைத் தமிழர்கள்.
தாரகேஷ்வரியின் தம்பி குகதாசன் (49). இவர் இலங்கையில் வசிக்கிறார். ஆண்டுதோறும் சபரிமலைக்குச் செல்வதற்காக தமிழகம் வருவார். அவ்வாறு வரும்போது மலைக்குச் சென்று விட்டு, தனது அக்கா தாரகேஸ்வரி வீட்டில் வந்து 1 மாதம் தங்கிச் செல்வது வழக்கம். இதேபோல் இந்த வருடமும் கடந்த 13-ம் தேதி இலங்கையில் இருந்து சபரிமலை செல்வதற்காக சென்னைக்கு வந்துள்ளார்.
தன்னுடைய அக்கா வீட்டுக்கு வந்துவிட்டு அன்றே சபரிமலைக்குச் சென்றுவிட்டு கடந்த 15-ம் தேதி சென்னை திரும்பியுள்ளார். அக்கா வீட்டுக்கு வந்தவர் அங்கு தங்கியுள்ளார். குகதாசனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. மாலையைக் கழற்றியவுடன் மது பாட்டிலைத் திறக்க ஆரம்பித்தவர் போதையிலேயே இருந்துள்ளார்.
இதை அவரது அக்கா தாரகேஷ்வரி இதனைக் கண்டித்து வந்துள்ளார். மது போதையில் அக்காவுடனும் , மருமகன்களுடனும் வாக்குவாதம் செய்துள்ளார். இப்படி தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்யத்தான் இலங்கையிலிருந்து சொந்தங்களைப் பார்க்க வந்தாயா எனத் திட்டியுள்ளார். தாய் வேதநாயகியும் உடன் திட்டியுள்ளார். ஆனால், குகதாசன் அதை அலட்சியம் செய்தார்.
தினமும் மது பாட்டில்களை வாங்கிவருவதும் வீட்டில் வைத்து குடிப்பதுமாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் 2 பாட்டில்களை வாங்கி வீட்டில் வைத்திருந்துள்ளார். நேற்றிரவு 10 மணிக்கு மேல் வீட்டுக்கு வந்த அவர் ஒரு பாட்டிலைத் திறந்து மது அருந்தியுள்ளார். மற்றொரு பாட்டிலைக் காணவில்லை. மற்றொரு பாட்டிலை மறந்து எங்கோ வைத்துவி, வீட்டில் பாட்டிலைத் தேடியபோது கிடைக்காததால் ஆத்திரத்தில் சத்தம் போட்டுள்ளார்.
அதற்கு அவரது அக்கா அவரைத் திட்டியுள்ளார். இதனால் அக்காதான் பாட்டிலை ஒளித்து வைத்துள்ளார் என்று கருதி அவருடன் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் மதுபோதை தலைக்கேற கடும் ஆத்திரத்தில் இருந்த குகதாசன் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்துவந்து அக்கா வேதநாயகியை சரமாரியாகக் குத்தியுள்ளார்.
மார்பு மற்றும் வயிற்றில் ஓங்கி குத்தியதில் தாரகேஷ்வரி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மகன் அதிஷான் தடுக்க முயல, அவரது மார்பிலும் கத்தியால் குத்தியுள்ளார். இதைப் பார்த்து 80 வயது தாய் தடுக்க முயல, அவரைத் தள்ளிவிட்டதில் சுவரில் மோதி விழுந்துள்ளார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவர குகதாசன் ரூமுக்குள் ஓடி பதுங்கிக்கொண்டார். உடனடியாக வீட்டின் உரிமையாளரும் அக்கம் பக்கத்தினரும் காயமடைந்த 3 பேரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தாரகேஷ்வரியைச் சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர். மகன் அதிஷான் மார்பில் கத்திக்குத்து காயத்துடனும், தாய் வேதநாயகி இடுப்பில் எலும்பு முறிந்த நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொலைச் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வளசரவாக்கம் போலீஸார் குகதாசனைக் கைது செய்தனர். உயிரிழந்த தாரகேஷ்வரி உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
மதுவெறி சகோதரி, தாய், மருகமகனைக் கொல்லும் அளவுக்குச் சென்றதும், அதில் சகோதரி உயிரிழந்திருப்பதும் அப்பகுதியில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.