

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டார்.
சிவகாசி அருகே கடந்த 20-ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய 8 வயது சிறுமி, வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது காணாமல்போனார்.
21-ம் தேதி காலை அப்பகுயில் உள்ள காட்டுப் பகுதியில் ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் சிறுமி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
போலீஸ் விசாரணையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், சிவகாசி பகுதியில் உள்ள பேரநாயக்கன்பட்டியில் அரிசி பை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த அசாம் மாநிலம் நல்பேரி மாவட்டத்தைச் சேர்ந்த அக்பர்அலி என்பவரது மகன் மஜம்அலி (20) என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து, சிவகாசி நகர் போலீஸார் மஜம்அலியைக இன்று கைது செய்தனர். கைதான இளைஞரை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி பரிமளா முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
இவ்வழக்கில் மேலும், 5 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை தேடும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.