Published : 23 Jan 2020 06:49 PM
Last Updated : 23 Jan 2020 06:49 PM

பல்லாவரத்தில் குப்பைத்தொட்டியில் வெடித்த மர்மப்பொருள்: தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

பல்லாவரம் பகுதியில் பழைய காவல் நிலையம் அருகில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மர்மப்பொருள் வெடித்ததில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த சங்கர்நகர் 22-வது தெருவில் ஏற்கெனவே பழைய காவல் நிலையம் இருந்தது. இங்கு வாகனச்சோதனையில், குற்றச்சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான இங்கு பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதால் குப்பைத்தொட்டியாகவே மாறியுள்ளது.

இந்நிலையில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ள இப்பகுதியில் இன்று காலை நகராட்சியில் இருந்து குப்பைகள் அள்ள ஊழியர்கள் வந்தனர். குப்பைகளை அள்ளும் பொழுது மர்மப்பொருள் ஒன்று திடீரென சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில் குப்பை அள்ளிக்கொண்டிருந்த நகராட்சி ஊழியர் தேவகி என்பவர் காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மர்மபொருள் வெடித்தது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த சங்கர் நகர் போலீஸார் மர்மப்பொருள் வெடித்தது குறித்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர் சோபியா நேரில் வந்து ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தார். ‌

தடயவியல் நிபுணர்களின் சோதனையில் வெடித்த மர்ம பொருள் ஒயிட் பாஸ்பரஸ் என தெரியவந்தது. பின்னர் தடயவியல் சோதனைக்கு கொண்டுச் செல்ல அங்குள்ள குப்பைகளுடன் கலந்து இருந்த துகள்களை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அப்புறபடுத்தினர். அப்போது மீண்டும் ஒயிட் பாஸ்பரஸ் துண்டுகள் அதிக சத்தத்துடன் நான்கைந்துமுறை வெடித்ததுள்ளது. இதனால் பயந்துப்போன பொதுமக்களும், ஜேசிபி வாகன ஓட்டுநரும் அங்கிருந்து ஓடினர்.

உடனடியாக போலீஸார் மேலும் அசம்பாவிதம் ஏதும் நிகழாவண்ணம் அந்தத்தெருவழியாக பொதுமக்கள் செல்ல தடைவிதித்து பாதுகாப்பு தடுப்புகளை வைத்தனர். குப்பைத்தொட்டியில் குப்பைகளுடன் ஒயிட் பாஸ்பரஸை யார் போட்டது என போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஒயிட் பாஸ்பரஸ் என்பது ஒருவகை கெமிக்கல் மட்டுமே அது வெடிகுண்டு போன்ற பொருள் அல்ல அதனால் வீணாக பீதியடைய வேண்டாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x