

களியக்காவிளை எஸ்.ஐ. வில்சன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே கழிவுநீர் ஓடையில் இருந்து போலீஸார் மீட்டுள்ளனர். கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் துப்பாக்கியைக் கண்டெடுத்துள்ளனர்.
கடந்த 8-ம் தேதி களியாக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ.வில்சன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் இரு மாநில போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் குற்றவாளிகள் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் (57), துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். போலீஸார் நடத்திய விசாரணை, சிசிடிவி காட்சி பதிவுகள் மூலம் அவரைக் கொலை செய்தது குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் சமீம், கேரளா கோட்டார் பகுதியைச் சேர்ந்த தவுபீக் என்பது தெரியவந்தது.
இருவரும் தலைமறைவான நிலையில் அவர்களை அண்டை மாநிலங்களிலும் போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் வில்சனைச் சுட்டுக் கொல்வதற்கு துப்பாக்கி வழங்கியதாக இஜாஸ் பாட்ஷா என்ற ஆம்னி பேருந்து ஓட்டுநரை பெங்களூருவில் கர்நாடக போலீஸார் கைது செய்தனர்.
அவருக்கும் வில்சன் கொலையாளிகளுக்கும் சம்பந்தம் இருக்குமோ என்கிற ரீதியில் போலீஸார் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் பதுங்கி இருந்த அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு களியக்காவிளை காவல் நிலையம் கொண்டு வரப்பட்டனர். முன்னதாக அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் இருவரிடம் போலீஸார் நடத்திய விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை கேரள போலீஸார் விசாரணைக்கு திருவனந்தபுரம் அழைத்துச் சென்றனர். இதனிடையே வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ விசாரணை கேட்டு தமிழக அரசு பரிந்துரைத்தது.
இதனிடையே குற்றவாளிகள் இருவரிடமும் கேரள போலீஸார் நடத்திய விசாரணையில், கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியை தாங்கள் எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே கழிவுநீர் ஓடையில் வீசியதாகத் தெரிவித்தனர். இத்தகவலை அடுத்து அவர்களை அழைத்துச் சென்று துப்பாக்கியை போலீஸார் மீட்டனர்.
துப்பாக்கி வெளிநாட்டு வகை என்றும், அதில் மிச்சம் 5 குண்டுகள் வெடிக்காத நிலையிலும் உள்ளது தெரியவந்தது. வில்சன் கத்தியால் 6 இடங்களில் குத்தப்பட்டிருந்தார். கத்தியை மீட்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.