

சென்னை பீர்க்கங்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் கும்பலாக வந்து பட்டப்பகலில் வீடுபுகுந்து கத்திமுனையில் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சென்னையை அடுத்த பீர்க்கங்கரணை அடிக்கடி பொதுமக்களை பாதிக்கும் நிகழ்வுகள் நடக்கும் பகுதியாக உள்ளது. இங்கு சமீப காலமாக கும்பலாக மோட்டார் சைக்கிளில் சுற்றும் சமூக விரோதிகள் பொதுமக்களை கத்திமுனையில் மிரட்டி செல்போன் பறிப்பு, பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று நடந்த சம்பவம் அப்பகுதியில் பெண்கள் வீடுகளில் பாதுகாப்பாக வசிப்பதே கேள்விக்குறியாகியுள்ளது. பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் கும்பலாக வரும் இவர்கள் வீடுகளுக்குள் தன்னந்தனியாக இருக்கும் பெண்களை வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்துச் செல்கின்றனர்.
சென்னையை அடுத்த பீர்க்கன்காரணை சீனிவாசா நகரில் வசிப்பவர் சுசித்ரா(46) நேற்று மாலை 3 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் கத்தியுடன் வீட்டில் புகுந்த 4 கொள்ளையர்கள் அவரை கத்தி முனையில் மிரட்டி அவர் அணிந்திருந்த 6.5 சவரன் தாலி சங்கிலி , 2 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்து சென்றனர்.
இதே போல் மாலை 6 மணிக்கு மோட்டார் சைக்கிள் வந்த 2 பேர் பழைய பெருங்களத்தூர் மூவேந்தர் நகர் விரிவாக்கம் பகுதியில் வசிக்கும் உஷா(29) என்பவர் வீட்டில் கத்தியுடன் புகுந்து உஷாவிடமும், அவரது தங்கையிடமும் கத்தியைக்காட்டி மிரட்டி 9.5 சவரன் செயின், 2 செல்போன்கள், ரூ.5000 ரொக்கப்பணத்தை பறித்துச் சென்றனர்.
இதேபோல் முடிச்சூர் மதனபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன ஊழியரை தாக்கி செல்போனை பறித்து சென்றனர். அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் பீர்க்கங்கரணை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸார் ரோந்துப்பணியை அதிகப்படுத்தவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.