Published : 20 Jan 2020 01:14 PM
Last Updated : 20 Jan 2020 01:14 PM

விபத்துக்குள்ளான பேருந்தின் பின்புறம் மோதிய ஆம்னி பேருந்து : நெடுஞ்சாலையில்  ஆபத்தை உணராமல் வேடிக்கை பார்த்த 5 பேர் பலி; 20 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி நின்ற அரசுப் பேருந்து மீது, அதிவேகமாக வந்த தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அரசுப் பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர், அதனைச் சாலையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

அரக்கோணத்தைச் சேர்ந்த ஐசக் என்பவர் தனது மகன் ராஜன் விண்ணரசின் நிச்சயதார்த்த விழாவுக்காக குடும்பத்துடன் தூத்துக்குடி சென்றுவிட்டு காரில் அரக்கோணம் திரும்பிக் கொண்டிருந்தார். அதிகாலை 3.30 மணியளவில் அவர்கள் கார், உளுந்தூர்பேட்டை அருகே இறைஞ்சி கிராமம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது அவர்களுக்குப் பின்னால் அறந்தாங்கியிலிருந்து சென்னை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

இறைஞ்சி கிராமம் அருகே வந்தபோது கார் திடீரென பிரேக் அடிக்க, காரின் பின்புறம் அரசுப் பேருந்து மோதியது. உடனடியாக சாலையோரம் வலது புறம் காரை நிறுத்தியுள்ளார் ஐசக். அவரது காரின் பின்புறம் அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டது. காரிலிருந்து இறங்கிய ராஜன் விண்ணரசு, அரசுப் பேருந்து ஓட்டுநரிடம், 'எப்படி காரின் பின்பக்கத்தில் மோதலாம்?' என வாக்குவாதம் செய்தார்.

அப்போது பேருந்தில் விழித்திருந்த சில பயணிகள், நெடுஞ்சாலையின் ஆபத்தை உணராமல் சாலையில் இறங்கினர். அவர்கள் ஓட்டுநர், கார் ஓட்டுநர் வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்தபடி நின்றனர்.

அதிகாலை இருட்டு விலகாத நேரம். அப்போது திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று வேகமாக வந்தது. அதன் ஓட்டுநர் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தைக் கவனிக்கவில்லை.

அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து, ஏற்கெனவே விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்தின் பின்புறத்தில் வேகமாக மோதியது. அப்போது பேருந்தின் பின்புறம் நின்று வாக்குவாதம் செய்து கொண்டிருந்த கார் ஓட்டுநர் ராஜன் விண்ணரசு மற்றும் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகள் 3 பேர் என 4 பேர், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது வேகமாக மோதியதில் தனியார் பேருந்தின் முன்பக்கம் கடும் சேதம் அடைந்தது. இதில் ஆம்னி பேருந்து ஓட்டுநர், ஆம்னி பேருந்தில் பயணித்த பயணிகள், சாலையில் நின்று வேடிக்கை பார்த்த மேலும் சிலர், அரசுப் பேருந்துக்குள் அமர்ந்திருந்த சிலர் என 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், ஆயிங்குடியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரும் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்து நடந்த விபத்தால் சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. நேற்று பொங்கல் விடுமுறை முடிந்து பெரும்பாலானோர் ஊர் திரும்பியதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்தது.

விபத்து குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பேருந்து ஓட்டுநர், கார் ஓட்டுநரின் அஜாக்கிரதை காரணமாக சாலையின் வலதுபுறம் வாகனங்களை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், வாகனங்களை சாலையில் அஜாக்கிரதையாக நிறுத்தியதும், பின்னால் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை ஏதும் செய்யாமலும், பயணிகளை ஆபத்து மிகுந்த நெடுஞ்சாலையில் நின்று வேடிக்கை பார்க்க அனுமதித்ததும் விபத்துக்கான காரணங்கள் எனத் தெரியவந்துள்ளது.

தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் ஆம்னி பேருந்தை இயக்கியிருக்கலாம், அதனால் சாலையில் நிற்கும் பேருந்தும், அதன் பின்னால் பயணிகள் கும்பலாக நிற்பதையும் கடைசி நேரத்தில் பார்த்து பேருந்தைக் கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x