பெட்ரோல் பங்க்கில் பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த விவகாரம்: கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

பெட்ரோல் பங்க்கில் பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த விவகாரம்: கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது
Updated on
2 min read

கோவையில் பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் உடை மாற்றும் அறையில் கேமரா பொருத்தப்பட்டு, அதில் பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் ராஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). மேட்டுப்பாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தனது மனைவியுடன் பணியாற்றி வந்தார். அதே பங்க்கில் பணியாற்றிய சுபாஷ் என்ற இளைஞர், பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் பெண்கள் உடை மாற்றும் அறையில், தனது மொபைல் போன் கேமராவை மறைத்து வைத்து, பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை ரகசியமாகப் படம் எடுத்துள்ளார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன் ராஜாவின் மனைவி உடை மாற்றும்போது இதைக் கவனித்துவிட்டார். உடனடியாக இதுகுறித்து தனது கணவர் ராஜாவிடம் கூற, அவர் சுபாஷுடன் சண்டை போட்டு அவரிடமிருந்து செல்போனைப் பிடுங்கி அந்தக் காட்சிகளை தனது செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.

இதுபற்றிய புகாரும் பங்க் உரிமையாளர்களிடம் கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் இரு தரப்பையும் அழைத்து, கண்டித்து வீடியோவை அழிக்குமாறு கூறினர்.ராஜா அவரின் செல்போனில் அந்தக் காட்சிகளை ஏற்றிக்கொண்டார் என சுபாஷ் கூறினார். ராஜாவின் செல்போனில் உள்ள காட்சிகளையும் அழிக்குமாறு பெட்ரோல் பங்க் நிர்வாகிகள் கூறினர்.

பெண்கள் உடை மாற்றுவதை ரகசியமாகப் படம் பிடித்த சுபாஷ் பணி நீக்கம் செய்யப்பட்டார். வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பெட்ரோல் பங்க்கில் பணியாற்றிய பெண்கள் யாரும் அப்போது போலீஸில் புகார் அளிக்கவில்லை.

இந்நிலையில், பெட்ரோல் பங்க்கில் எடுக்கப்பட்ட வீடியோ கடந்த ஜனவரி 7-ம் தேதி சமூக வலைதளங்களில் பரவியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸில் புகார் அளித்தனர். கோவை போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. வீடியோ எடுத்த சுபாஷை விட, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ராஜா பெண்களை எப்படிப் பார்க்கிறார் என்பது வெளிப்பட்டது.

சுபாஷ் எடுத்த வீடியோவை, தனது செல்போனில் ஏற்றிக்கொண்ட ராஜா அதை முழுவதும் அழிக்காமல், தனது செல்போனில் ரகசியமாகப் பாதுகாத்து வைத்திருந்தார்.

சில மாதங்கள் கழித்து, சந்தடி அடங்கியவுடன் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் தனது நண்பர் மருதாச்சலத்துக்கு (42) அந்தக் காட்சிகளை ஷேர் செய்துள்ளார். மருதாச்சலம் அப்படியே அந்தக் காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது தெரியவந்தது.

சுபாஷ், ராஜா, மருதாச்சலம் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீஸார் பெண்கள் குறித்து அவதூறு பரப்புதல், தகவல் தொழில் நுட்பச் சட்டப் பிரிவு, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டதன் பேரில் மூவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in