வியாசர்பாடியில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை

கொலை செய்யப்பட்ட சந்தோஷ்குமார்.
கொலை செய்யப்பட்ட சந்தோஷ்குமார்.
Updated on
1 min read

சென்னை வியாசர்பாடியில் இளைஞர் ஒருவரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஓடஓட விரட்டி அவரது வீட்டுக்குள் வைத்து, கொலை செய்து தப்பிச் சென்றது. இதில் 3 பேரை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

வியாசர்பாடி முகமது இஸ்மாயில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (23). இவர் பகுதி நேரமாகக் கிடைத்த வேலைகளைச் செய்து வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் அவரது இடத்தில் அம்பேத்கர் தெருவில் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்துள்ளனர். யாரோ தெருவில் செல்கிறார்கள் என நினைத்து சந்தோஷ்குமார் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்க, திடீரென அந்த கும்பல் கையில் பட்டா கத்திகளுடன் சந்தோஷ்குமாரைத் தாக்க முயன்றனர்.

இதைப் பார்த்த சந்தோஷ்குமார், அவரது நண்பர்கள் அவர்களிடமிருந்து தப்பி ஓடினர். ஆனால அந்த கும்பல் சந்தோஷ்குமாரை மட்டுமே குறிவைத்துத் துரத்தியது. அவர் அவர்களிடமிருந்து தப்பிக்க, தனது வீட்டிற்குள் சென்று பதுங்கினார்.

ஆனால், அவரைத் துரத்திய மர்ம கும்பல் வீட்டினுள் புகுந்து சந்தோஷ்குமாரைச் சரமாரியாக வெட்டியது. இதைப் பார்த்து அவரது பெற்றோர்கள் அலற, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் அந்த கும்பல் தப்பிச் சென்றுவிட்டது.

ரத்தவெள்ளத்தில் கிடந்த சந்தோஷ்குமார் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். கொலை குறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் போலீஸார் சந்தோஷ்குமாரின் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் முன் பகை காரணமாக கொலை நடந்ததாகத் தெரியவந்துள்ளது. விசாரணையில் நவீன் (எ) நரம்பு நவீன் என்பவர் உட்பட 3 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in