சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.10.8 லட்சம் மதிப்புள்ள அந்நியச் செலாவணி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்க ஆணையாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
“சென்னை விமான நிலையத்தில் நேற்றும் இன்றும் சுங்கத்துறையினர் 8 பயணிகளிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் ரூ.1.03 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ தங்கம், ஒரு பயணியிடம் மேற்கொண்ட சோதனையில் ரூ.10.8 லட்சம் மதிப்புள்ள அந்நியச் செலாவணி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

வியாழக்கிழமை அன்று இலங்கையிலிருந்து வந்து சேர்ந்த சாகுல் ஹமீது பாதுஷா, யாசர் அராஃபத், அசாருதீன், யூசுப் மவுலானா ஆகியோரிடம் நடத்தப்பட்ட சோதனைகளில் அவர்களது ஆசன வாயிலில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 தங்கப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

ஒரு பயணியின் கால்சட்டைப்பையிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 50 கிராம் தங்கச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடமிருந்து மொத்தம் ரூ.38.8 லட்சம் மதிப்புள்ள 947 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில் ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

அதே நாளில் கொழும்புவிலிருந்து வந்த அஞ்சனா நீரஜ் நெல்சன் மற்றும் கலந்தர் இர்ஃபான் ஆகியோரிடம் நடத்தப்பட்ட சோதனைகளில் 6 பொட்டலங்களில் பேஸ்ட் வடிவத்தில் ஆசன வாயிலில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதிலிருந்து 564 கிராம் எடையுள்ள ரூ.23.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இன்று காலை கொழும்புவிலிருந்து வந்த வார்னாகுலசூர்யா மேரியா கிரிஷாந்தி என்பவரிடமும், பாங்காங்கிலிருந்து வந்த ஃபாத்திமாகனி என்பவரிடமும் நடத்தப்பட்ட சோதனைகளில் மேரியாவின் உள்ளாடைகளில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட 491 கிராம் தங்கக்கட்டியும், ஃபாத்திமாவின் ஆசனவாயிலில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட பேஸ்ட் வடிவிலான 450 கிராம் எடையுள்ள தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் இருவரிடமும் மொத்தம் 941 கிராம் எடையுள்ள ரூ.38.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

வியாழக்கிழமை அன்று பாங்காங்க் செல்லவிருந்த ராமநாதன் என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையின்போது, 13,700 யூரோவும், 3,400 தாய் பட்டும், 225 மலேஷியா ரிங்கிட்டும், 121 அமெரிக்க டாலரும் அவரது கைப்பபை மற்றும் கால்சட்டைப் பையிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வெளிநாட்டு நாணயங்களின் மதிப்பு ரூ.10.83 லட்சம் ஆகும்.

இந்தப் பறிமுதல் சம்பவங்களில் மேல் விசாரணை நடைபெற்று வருகிறது”. இவ்வாறு சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்க ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in