

துக்ளக் பத்திரிகை விழாவில் ரஜினி பேசியது பொது அமைதியைக் குலைக்கும் விதமாக அமைந்ததாக ரஜினிக்கு எதிராக கோவை போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆசிரியர் ‘சோ’வின் நெருங்கிய நண்பர் . ‘சோ’ அவருக்கு ஆலோசகராகவும் விளங்கியதாகச் சொல்வார்கள். துக்ளக் ஆண்டு விழா ஆண்டுதோறும் பொங்கலன்று நடைபெறும். இவ்விழாவில் அனைத்துக் கட்சியினரையும் ‘சோ’ அழைப்பார். பல நேரம் கருத்து மோதல் நடக்கும் கூட்டமாக அது அமையும்.
ஆண்டு விழாவில் பிரதமர் மோடி, அத்வானி உள்ளிட்ட பாஜகவின் முக்கியத் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஊரில் இருந்தால் ரஜினிகாந்த் கட்டாயம் கலந்து கொள்வார். ஆனால், அவர் எப்போதும் பார்வையாளராகவே இருப்பார்.
‘சோ’ மறைவுக்குப் பின் துக்ளக் பத்திரிகை ஆசிரியராக குருமூர்த்தி பொறுப்பேற்றார். இந்த ஆண்டு துக்ளக் பத்திரிகையின் 50-வது ஆண்டு விழா ஆகும். இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டார். ரஜினியும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
ரஜினி இந்த மேடையில் பேசிய பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. சில பேச்சுகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கிண்டலும் அடிக்கப்பட்டது.
ரஜினி பேசியபோது துக்ளக் பத்திரிகையின் பெருமை குறித்துப் பேசும்போது 1971-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு பேசினார். அதில் பெரியார் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
அவர் பேசிய பேச்சு வருமாறு:
“1971-ல் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார். அதை யாரும் பத்திரிகையில் போடவில்லை. சோ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அப்போது முதல்வர் கருணாநிதிக்குச் சிக்கல் உருவானது. அதன் பின்னர் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். அதற்கு அடுத்த வாரம் மீண்டும் அச்சடித்து கருப்பு நிறத்தில் அட்டை வெளியிட்டார் சோ. அந்தப் பத்திரிகை அதிக அளவில் விற்றது.
அதன்மூலம் பத்திரிகை உலகில் பிரபலமானார் சோ. அதற்குக் காரணமானவர் கருணாநிதி. அதற்கு அடுத்த இதழில் தங்கள் பத்திரிகையின் பப்ளிசிட்டி மேனேஜர் என்று கலைஞர் படத்தைப் பெரிதாகப் போட்டார் சோ”.
இவ்வாறு ரஜினி பேசியிருந்தார்.
இதுகுறித்தும், முரசொலி , துக்ளக் குறித்தும் ரஜினி ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ரஜினி தவறான தகவலைப் பதிவு செய்கிறார், 1971-ல் நடந்தது வேறு. அவர் தனது பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் அறிக்கை விட்டனர். இந்நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம் (கோவை மாவட்டம்) சார்பில் ரஜினி மீது கோவை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திராவிடர் விடுதலைக் கழகம் , கோவை மாவட்டம் சார்பில், நேருதாஸ் என்பவர் அளித்துள்ள புகார் விவரம்
பொருள்: தந்தை பெரியார் பற்றி அவதூறு மற்றும் வதந்தியைப் பரப்பி பொது அமைதியைக் குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளக் கோருதல் தொடர்பாக
“கடந்த 14.01.2020 அன்று சென்னையில் நடந்த துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, 1971-ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் ராமன், சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டதாக ஒரு அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலைப் பரப்பி தந்தை பெரியாரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தியைப் பரப்பி பொது அமைதியைக் குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153A மற்றும் 505 OF IPC பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.