வாலாஜா சுங்கச்சாவடி அருகே பனி மூட்டம்: 10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து; 6 பேர் படுகாயம்

10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து
10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடி அருகே கடுமையயான பனி மூட்டம் காரணமாக அடுத்தடுத்து லாரி, கார் உள்ளிட்ட 10 வாகனங்கள் மோதிக் கொண்டதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக காலை நேரத்தில் கடுமையான பனி மூட்டம் இருக்கிறது. இதன் காரணமாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் விளக்கு வெளிச்சத்தில் செல்கின்றன. வழக்கம்போல் இன்று (ஜன.14) காலையும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட வாலாஜா சுங்கச்சாவடி அருகே உள்ள மேம்பாலத்தில் சரக்கு வாகனம் ஒன்று இன்று காலை மெதுவாக சென்று கொண்டிருந்தது.

அப்போது, அந்த வாகனத்தின் மீது வேகமாகச் சென்ற மற்றொரு சரக்கு வாகனம் மோதியது. இதனைத் தொடர்ந்து வேகமாக வந்து கொண்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது. பனி மூட்டத்தால் ஏற்பட்ட இந்த விபத்தில் 4 சரக்கு வாகனங்கள் 6 கார் உள்ளிட்ட10 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவலின்பேரில் வாலாஜா காவல் ஆய்வாளர் பாலு தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியை துரிதப்படுத்தினர். அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள லட்சுமணாபுரத்தைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர் சதீஷ் (30), கன்டெய்னர் லாரியில் பயணம் செய்த தனியார் நிறுவன ஊழியர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியைச் சேர்ந்த மகாலிங்கம் (42), ஆற்காட்டைச் சேர்ந்த யுவராஜ் (32), வேலூர் மாவட்டம் வெட்டுவானத்தைச் சேர்ந்த பாலு (66), அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் குமாரபாண்டியன் (45) உள்ளிட்ட 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். குமாரபாண்டியன் மட்டும் வேலூரில் உள்ள தனியார் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இந்த விபத்து நடந்த நேரத்தில் சென்னையில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தும்படி காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். இந்த விபத்து குறித்து வாலாஜா காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in