

களியக்காவிலை சோதனைச்சாவடியில் எஸ்.ஐ.வில்சனை கொன்றுவிட்டுத்தப்பிச் சென்ற இரண்டு குற்றவாளிகளும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர்.
குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். பரபரப்பை ஏற்படுத்திய கொலையில் போலீஸார் நடத்திய விசாரணையில் வில்சனை கொலை செய்த பின்னர் குற்றவாளிகள் இருவரும் தப்பிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது சிக்கியது.
கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் ஃபேஸ் டிடக்டர் மூலம் போலீஸார் ஆய்வு செய்தபோது அதில் நாகர்கோயில் அகத்தீஸ்வரத்தைச் சேர்ந்த தவுபிக்(27) எனும் முன்னாள் குற்றவாளி இருப்பது உறுதியானது. உடன் இருந்தவர் கன்னியாகுமரி திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் சமீம்(29) என்பது உறுதியானது. இதை வைத்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக தமிழக, கேரளா போலீஸார் அறிவித்தனர்.
தவுபிக்கை ஏற்கெனவே விசாரித்த என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். குமரி மாவட்டம், மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், கேரளா உட்பட அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரின் உறவினர்கள், மற்றும் நண்பர்கள் என தொடர்பில் இருந்த 120-க்கும் மேற்பட்டோரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனாலும் குற்றவாளிகளை நெருங்க முடியவில்லை.
தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் குற்றவாளிகள் இருவரும் அதிக தொடர்பில் இருப்பதால் 3 மாநிலங்களிலும் தனிப்படையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கொலையாளிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்ததாக இஜாஸ் பாட்சா என்பவரை கர்நாடக போலீஸார் கைது செய்தனர். இவர் மும்பையிலிருந்து துப்பாக்கி வாங்கிவந்தது தெரியவந்தது.
இந்நிலையில் வில்சனைக்கொன்ற குற்றவாளிகளை தீவிரமாக போலீஸார் தேடிவந்த நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் அப்துல் சமீம், தவுபீக் ஆகிய இருவரையும் கர்நாடக மாநில போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களை உடனடியாக பெங்களூர் அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் கியூ பிராஞ்ச் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கெனவே என்ஐஏ விசாரணை வளையத்தில் இருக்கும் தவுபிக்கை விசாரிக்க என்ஐஏவும் களத்தில் குதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்தவித பின்புலமும் இல்லாத வில்சனை எதற்காக இவர்கள் திட்டமிட்டு கொலை செய்தார்கள், என்ன காரணம் என்பது குறித்து இருவரிடமும் நடத்தப்படும் விசாரணையின் முடிவில் தெரியவரும்.