கோத்தகிரி அருகே இரு பழங்குடியினர் கொலை: ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஆறு பேர் கைது

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கோத்தகிரி அருகே இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சோலூர் மட்டத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது, மெட்டுக்கல் இருளர் பழங்குடியினர் கிராமம். இந்த கிராமத்துக்கு அருகில் உள்ள மேரக்காய் தோட்டத்தில் கடந்த 10-ம் தேதி இரண்டு ஆண் சடலங்கள் கிடப்பதாக சோலூர் மட்டம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

அடர் வனத்தை ஒட்டிய பகுதி என்பதால் அதிரடிப்படையினரும், போலீஸாரும் சம்பவ இடத்துக்குச் சென்றனர். இரண்டு பேரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தனர்.

முதல்கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (35), திம்மன் (19) என்பது தெரியவந்தது. இருவரது கழுத்துப் பகுதியிலும் பலத்த வெட்டுக்காயம் இருந்ததால், இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் இறந்தனரா அல்லது வேறு யாராவது கொலை செய்தனரா என சந்தேகம் ஏற்பட்டது. சோலுார்மட்டம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மெட்டுக்கல் கிராமத்தைச் சேர்ந்த குமார் 41, பாபு 40, மூர்த்தி 39, மகேந்திரன் 41, கிருஷ்ணன் 40, ஜே.குமார் 55 ஆகிய ஆறு பேரை போலீஸார் நேற்றிரவு (ஜன.13) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது:

"இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி பாபு. இவரது மகளும், கொலையான திம்மனும் காதலித்துள்ளனர். இதை பாபு கண்டித்துள்ளார். இந்நிலையில், பொங்கல் விழா முடிந்ததும் இருவரும் திருமணம் செய்ய ஊரை விட்டு செல்ல திட்டமிட்டிருந்துள்ளனர்.கொலையான ராமச்சந்திரன், கிராம மக்களை கேட்காமல், புறம்போக்கு நிலத்தை விவசாயம் செய்வதற்காக சுத்தம் செய்துள்ளார். இதனால், கிராம மக்களுடன் பிரச்சினை இருந்துள்ளது.

இதை பயன்படுத்திக்கொண்ட பாபு, தன்னுடன் ஐந்து பேரை சேர்த்துக்கொண்டு கடந்த 9-ம் தேதி இரவு, நர்சரியில் துாங்கிக் கொண்டிருந்த திம்மன் மற்றும் ராமசந்திரனை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in