Published : 14 Jan 2020 12:50 PM
Last Updated : 14 Jan 2020 12:50 PM

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு: ரயில்வே போலீஸ் துரித நடவடிக்கை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 2 வயதுக் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. கடத்திய நபரும் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் நேற்று முன் தினம் 12 மணி நேரத்தில் 2 குழந்தைகள் கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் குழந்தை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையிலிருந்து கடத்தப்பட்டது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ரந்தேஷா போஸ்லே (20) என்ற பெண்ணின் இவர்களுக்கு 8 மாத ஆண்குழந்தை ஜான் ஒரு பெண்ணால் நூதன முறையில் பெற்றோரை ஏமாற்றி கடத்தப்பட்டது. சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைக்காட்டி ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு குழந்தையுடன் தாயை அழைத்துச் சென்ற மர்மப்பெண் குழந்தையை கடத்திச் சென்றார்.

அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் ராஜீவ் காந்தி மருத்துவமனை எதிரே உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அசார் அலி (28) என்பவரின் மனைவி மர்சினா (25)வின் 2 வயது குழந்தை கடத்தப்பட்டது.

மர்சினாவின் இரண்டாவது கணவர் ஹமீதுடன் நடைமேடை 10-ல் படுத்து உறங்கினர். அதிகாலை 4 மணி அளவில் பார்த்தபோது அருகில் உறங்கிக்கொண்டிருந்த 2 வயதுக் குழந்தை ரஷிதாவைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தாய் மர்சினா, ரயில்வே போலீஸில் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்ற ரயில்வே போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மர்சினாவின் இன்னொரு நண்பர் தீபக் மண்டல் (32) என்பவர் குழந்தையைத் தூக்கிச் செல்வது பதிவாகி இருந்தது. நள்ளிரவு 1.19-க்கு அனைவரும் அசந்து உறங்கிய நேரத்தில் தீபக் மண்டல் குழந்தை ரஷிதாவை தூக்கிச் செல்வது பதிவாகியிருந்தது.

குழந்தைக் கடத்தல் தகவல் பரபரப்பானதை அடுத்து அனைத்து இருப்புப்பாதை காவல் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டன. இந்நிலையில் மும்பை நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் ஸ்டேஷனில் நின்றது. திண்டுக்கல் இருப்புப்பாதை ஆய்வாளர் செல்வி ரயிலை சோதித்து வந்தபோது 2 வயது குழந்தையை வைத்துக்கொண்டு பிச்சை எடுத்த இளைஞரை மடக்கிப்பிடித்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

அவரது புகைப்படத்தைப் பார்த்த போலீஸார் அவர்தான் குழந்தையைக்கடத்திய நபர் என தெரிவித்தனர். பின்னர் குழந்தையுடன் கைது செய்யப்பட்ட மண்டல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டார். குழந்தையை தாய் மர்சினாவிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

தீபக் மண்டல் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர். முதல் கணவரைப்பிரிந்து இரண்டாவதாக ஹமீதுடன் வசிக்கும் மர்சினாவை தன்னுடன் வந்துவிடும்படி அழைத்ததாகவும் அந்த எண்ணம் நிறைவேறாததால் குழந்தையைக் கடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

தீபக் மண்டல் இதேப்போன்று குழந்தைகளை கடத்தியுள்ளாரா? குழந்தை கடத்தல் கும்பல் ஏதேனும் பின்புலத்தில் உள்ளனரா என ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே குழந்தை கடத்தப்பட்டு 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டு உடனடியாக தாயிடம் ஒப்படைக்கப்பட்டதை காவல் உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். தனது குழந்தையை மீட்டு தந்ததற்கு தாய் மர்சினா நன்றி தெரிவித்தார். அதே நேரம் ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவ மனையில் கடத்தப்பட்ட குழந்தை இன்னும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x