

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 8 மாதக் குழந்தை நேற்றிரவு கடத்தப்பட்ட நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் 2 வயதுக் குழந்தையை மர்ம நபர் கடத்திச் சென்றது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ரந்தேஷா போஸ்லே (20). இவர் கணவர் ஜானி போஸ்லே (24), மாமியார் அர்ச்சனா என்பவருடன் சென்னை கடற்கரை கண்ணகி சிலை பின்புறம் கடற்கரை மணலில் வசித்து வருகிறார். காந்தி சிலை பின்புறத்தில் பலூன் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 8 மாதத்தில் ஜான் என்கிற ஆண் குழந்தை உள்ளது.
நேற்றிரவு 11.30 மணியளவில் அடையாளம் தெரியாத சுமார் 20 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப் பெண் ஒருவர், தாய் ரந்தேஷா போஸ்லாவிடம் பேசினார். தாங்கள் சினிமாப் படம் ஒன்று எடுப்பதாகவும், அதற்கு நடிக்க ஆண் குழந்தை ஒன்று தேவைப்படுகிறது. நிறைய பணம் கிடைக்கும் என்று கூறி, குழந்தையுடன் தாயை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஏமாற்றி குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டார்.
இதேபோன்று அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அசார் அலி (28), தனது மனைவி மர்சினா (25), நண்பர் ஹமீது மற்றும் 6 வயதுக் குழந்தை மற்றும் 2 வயதுக் குழந்தை ரஷிதாவுடன் ஊருக்குச் செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தனர்.
காலையில் ரயில் என்பதால் நடைமேடை 10-ல் படுத்து உறங்கினர். அதிகாலை 4 மணி அளவில் பார்த்தபோது அருகில் உறங்கிக்கொண்டிருந்த 2 வயதுக் குழந்தை ரஷிதாவைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அசார் அலி, ரயில்வே போலீஸில் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்ற ரயில்வே போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஹமீதின் நண்பர் (அசார் அலியுடன் உறங்கிய வர் ஹமீது) குழந்தையைத் தூக்கிச் செல்வது பதிவாகி இருந்தது. நள்ளிரவு 1.19-க்கு அனைவரும் அசந்து உறங்கிய நேரத்தில் அமீதின் நண்பர் குழந்தை ரஷிதாவை தூக்கிச் செல்வது பதிவாகியிருந்தது.
குழந்தையைக் கடத்திச் சென்ற நபரை ரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர். சென்னையில் 12 மணிநேரத்தில் அடுத்தடுத்து 2 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தப்பட்ட 2 குழந்தைகளின் பெற்றோர்களும் அப்பாவிகள், கூலித்தொழிலாளிகள, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.