

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காரும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர்.
திருச்சி ஒறையூரைச் சேர்ந்த பழனிவேல் மகன் முத்தமிழ்ச்செல்வன் (35). இவர்வெளிநாட்டில் பயிற்சிக்காக சென்று விட்டு நேற்று சென்னை திரும்பியுள்ளார். சென்னை திரும்பிய முத்தமிழ்ச்செல்வனை வரவேற்பதற்காக, அவருடைய மனைவி நிஷா (31), மகன் சித்தார்த் (7), மகள் வைஷ்ணவி (1) மற்றும் மாமியார் மல்லிகா (70) ஆகியோர், திண்டுக்கல்லில் இருந்து இரு தினங்களுக்கு முன் ரயில் மூலம் சென்னை சென்று, அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.
இதையடுத்து, முத்தமிழ்ச்செல்வன் சென்னை வந்ததும், திருச்சியில் பொங்கல் கொண்டாடுவதற்காக, அவருடன் கிளம்பி இன்று (டிச.13) காலை திருச்சி நோக்கி குடும்பத்துடன் பயணித்துள்ளனர். காரை முத்தமிழ்ச்செல்வன் ஓட்டி வந்துள்ளார். இவர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் வழியாக திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
கார் பிற்பகல் உளுந்தூர்பேட்டையை அடுத்த வண்டிப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி சாலையின் தடுப்புக் கட்டையில் மோதி, தடம்புரண்டு சாலையில் கவிழ்ந்து விழுந்தது. அப்போது அவ்வழியாக விழுப்புரத்திலிருந்து விருதாச்சலம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, விபத்துக்குள்ளான காரின் மீது மோதிக் கவிழ்ந்தது. இதில் காரில் பயணித்த முத்தமிழ்ச்செல்வன், நிஷா, சித்தார்த், வைஷ்ணவி மற்றும் மல்லிகா ஆகியோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநாவலூர் போலீஸார், காரின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு மீட்டனர். அப்போது முத்தமிழ்ச்செல்வன், மல்லிகா, நிஷா, சித்தார்த் ஆகியோர் இறந்த நிலையில், ஒரு வயதுக் குழந்தை வைஷ்ணவி உயிருக்குப் போராடியது. இதையடுத்து குழந்தையை சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. பின்னர் அவர்களின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 24 பயணிகள் லேசான காயங்களுடன் தப்பினர். இந்த விபத்து குறித்து திருநாவலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கோர விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.