

அரக்கோணம் அருகே ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த மேலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுரேஷ் (38). இவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தன் மனைவியுடன் சேர்ந்து வீட்டைச் சுத்தம் செய்யும் பணியில் இன்று (ஜன.13) காலை ஈடுபட்டார். அப்போது, தனது மகள் ஹரிணி (4), மகன் தர்ஷன் (3) ஆகிய 2 பேரையும் வீட்டின் அருகேயுள்ள ஏரிக்கரை அருகே விளையாடும்படி அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
ஏரிக்கரை அருகே விளையாடிக்கொண்டிருந்த ஹரிணியும், தர்ஷனும் தவறி ஏரிக்குள் விழுந்தனர்.
அப்போது அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, ஏரியில் இறங்கி குழந்தைகளை மீட்டனர். அருகேயுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 2 குழந்தைகளும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்ற 2 குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து அரக்கோணம் கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மேலேரி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.