Published : 10 Jan 2020 10:07 PM
Last Updated : 10 Jan 2020 10:07 PM

16 நாட்கள் 400 கி.மீ. பயணம், 460 சி.சி.டிவிக்கள் சோதனை: சொந்தமாக நகைக்கடை நடத்திய கொள்ளையர்கள் சிக்கிய சுவாரஸ்ய கதை : நெல்லை காவல்துறையின் சபாஷ் நடவடிக்கை 

நெல்லையில் குல தெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த இடத்தில் கொள்ளையடித்து தப்பிச் சென்ற திருப்பூர் கொள்ளையர்களை, 460 சிசிடிவி காட்சிகளை 400 கி.மீ.பயணம் செய்து சேகரித்து சிறு 3 இஞ்ச் ஸ்டிக்கர் தடயத்தை வைத்து 4 கொள்ளையர்களை பிடித்துள்ளனர் நெல்லை போலீஸார்.

இதுகுறித்த சுவாரஸ்ய கதையை பார்ப்போம்.

கடந்த டிசம்பர் 20 ம் தேதியன்று திருநெல்வேலி விஎம் சத்திரத்தை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் ஊருக்கு போயிருந்த நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 77 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

2019-ம் ஆண்டில் திருநெல்வேலி மாநகரத்தில் நடந்த கொள்ளையில் இதுவே அதிகம் என்பதால் நெல்லை காவல்துறைக்கு பெரும் சிக்கலான வழக்காக பார்க்கப்பட்டது. நெல்லை மாநகர கமிஷனர் தீபக் தாமோர் உத்தரவின் படி குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

முதலில் கொள்ளை நடந்த வீட்டை போலீஸார், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். கொள்ளையர்கள் கைதேர்ந்தவர்கள் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்தது. கவனமாக கைரேகை பதிவதை தவிர்த்திருந்தனர்.

வேறு எந்த தடயத்தையும் அவர்கள் விட்டுச் செல்லவில்லை. கொள்ளைச் சம்பவம் நடந்த அன்று இரவு அப்பகுதியில் சென்ற வாகனங்களை நெல்லையின் சிசிடிவி காட்சிகளை சேகரித்து ஆய்வை தொடங்கியது தனிப்படை.

தொடர்ச்சியாக பல காட்சிகளை ஒப்பிட்டு ஒப்பிட்டு வாகனங்களின் எண்களை சேகரித்து அவைகளை ஆய்வு செய்த போலீஸாருக்கு ஒரு முக்கியமான க்ளூ கிடைத்தது. அது அந்தப்பகுதி வழியாக சென்ற வாகனங்களில் ஒரு வாகனத்தின் எண் மட்டும் போலி எண்ணாக இருந்ததை கண்டுபிடித்தனர்.

இது போதாதா போலி எண் கொண்ட காரை வேறு யார் பயன்படுத்துவார்கள். நகையை கொள்ளையடித்த கும்பல் அந்தக் காரைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று போலீஸார் முடிவுக்கு வந்தனர்.

பின்னர் அந்தக்கார் சென்ற திசையை தொடர்ச்சியாக தொடர நினைத்த போலீஸாருக்கு ஏற்கெனவே சென்னையைப்போல் நெல்லை முழுதும் போலீஸ் அதிகாரிகள் முயற்சியால் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டிருந்தது நல்வாய்ப்பாக அமைந்தது. நாலாப்புறமும் தேடுதலை தொடங்கிய தனிப்படை போலீஸார் நெடுஞ்சாலை, சோதனை சாவடிகள் , ஓட்டல்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் என 460 சிசிடிவிகளை பொறுமையாக ஆராய்ந்தனர்.

ஓவ்வொரு சிசிடிவி காட்சியிலும் சம்பந்தப்பட்ட கார் செல்லும் காட்சிகளை சேகரித்து ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து தொடர்ந்தனர். இப்படி போலீஸார் ஆய்வு செய்து கொண்டே சென்ற தூரம் எவ்வளவு தெரியுமா 400 கிலோமீட்டர்.

ஆனால் அதுவும் சுலபமாக இல்லை. நூறு கிலோமீட்டர் சென்றப்பின்னர் அந்த நம்பர்பிளேட் கொண்ட காரை காணவில்லை. ஆனால் அதே கலர் கார் அப்பகுதியை கடக்கிறது. போலீஸருக்கு பெரும் குழப்பம் ஏற்படுகிறது. சோர்வும் ஏற்படுகிறது. இவ்வளவு தூரம் வந்தப்பின்னர் கார் எப்படி மாயமானது என்று யோசிக்கின்றனர். அப்போது அவர்களுக்கு சின்ன க்ளூ ஒன்று கிடைக்கிறது. அதுதான் கொள்ளையர்கள் சிக்குவதற்கு முக்கிய துப்பாக அமைகிறது.

எப்படி என்றால் திடீரென கார் மறைந்தப்பின்னர் அடுத்துள்ள சிசிடிவி கேமராவில் அதே நிறமுள்ள கார் சென்றாலும் வேறு நம்பர் பிளேட் உள்ளது. அப்போது இதுவரை போலீஸார் கண்காணித்து வந்த காருக்கும், தற்போது செல்லும் காருக்கும் ஒரு ஒற்றுமையை போலீஸார் கண்டுபிடிக்கின்றனர். அது 3 இஞ்ச் அகலமுள்ள ஒரு ஸ்டிக்கர்.

அந்த ஸ்டிக்கர் பெட்ரோல் பங்கில் வாட்டர் சர்வீஸ் செய்ததற்காக ஒட்டியது. இரண்டு காரும் ஒரே கலர் ஒரே மாடல் ஆனால் நம்பர் பிளேட் வேறு. ஆனால் பெட்ரோல் பங்கில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் ஒரே இடத்தில் ஒரே மாதிரி பின்பக்க கண்ணாடிக்கு கீழ் உள்ளது.

ஆகவே அதே கார்தான் ஆனால் நம்பர் பிளேட்டை மீண்டும் மாற்றியுள்ளார்கள் என முடிவுக்கு வந்த போலீஸார் அந்தக்காரை சிசிடிவி காட்சிகளை வைத்து பின் தொடர்கின்றனர். மீண்டும் அடுத்த 100 கிலோ மீட்டரை கடக்கும்போது அதே கார் வேறு நம்பர் பிளேட்டில் செல்கிறது. ஆனால் 3 இஞ்ச் ஸ்டிக்கர் அதே இடத்தில் அப்படியே உள்ளது.

இவ்வாறு 400 கி.மீ பயணம் செய்த பின்னர் 3 நம்பர் பிளேட் மாற்றிய கார் திருப்பூரில் காணாமல் போகிறது. உடனடியாக இடதுபக்கம் திரும்பி திருப்பூருக்குள் போலீஸ் படை பயணிக்கிறது, அங்குள்ள சில சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும்போது ஒரு ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சியை சோதனையிடும்போது மேலும் முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

ஹோட்டலில் காரை நிறுத்திய கொள்ளையர்கள் அங்கு உணவு உண்ண இறங்கியுள்ளனர். அதில் காரிலிருந்து 4 பேர் இறங்குவது தெரிகிறது. நான்கு பேர் என்பதை உறுதி செய்தபின்னர் அவர்கள் உருவத்தை எடுத்து திருப்பூர் போலீஸாரிடம் நெல்லை போலீஸார் காண்பிக்க நால்வரில் ஒருவர் ஏற்கெனவே பல திருட்டுச் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட நபர் என தெரிகிறது.

அப்புறம் என்ன திருப்பூரில் இருந்த ராமஜெயம், குருவி சக்தி, முகமது ரபீக், யாசர் அராபத் ஆகிய நாலுபேரை கொத்தாக தூக்கியுள்ளனர் நெல்லை போலீஸார். அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் 50 வழக்குகளுக்கு மேல் சம்பந்தப்பட்டவர்கள். சொகுசு காரில் வலம் வந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு நிமிடத்தில் கொள்ளையடித்து தப்பிச் செல்வதை வழக்கமாக கொண்டவர்கள் .

கொள்ளையடிக்கும் நகைகளை சந்தேகம் வராமல் விற்க சொந்த ஊரில் மங்களம் நகைக்கடை என்ற பெயரில் நகைக்கடை ஆரம்பித்து நடத்தி வந்துள்ளனர். எந்த மாவட்டத்தில் கொள்ளையடித்தாலும் சொந்த ஊரில் வந்து செட்டில் ஆகி தொழிலதிபராக வலம் வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. அவர்களுக்கு ஆகாத நேரம்,. கொள்ளையடித்த நகைகளை வைத்து ஆரம்பித்த கடையில் வியாபாரம் பெருக குலதெய்வத்தைக் கும்பிட நெல்லை வந்துள்ளனர்.

சரி வந்த இடத்தில் ஒரு கொள்ளை அடிக்கலாம் என்றுதான் நெல்லையில் கைவரிசை காட்டியுள்ளனர். நெல்லை போலீஸார் பற்றி தெரியாமல் கைவரிசை காட்டியதில் தற்போது சிக்கிக்கொண்டதுதான் இதில் உச்சபட்ச ஹைலைட்..

திறமையாக செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை போலீஸாரை காவல் ஆணையர் தீபக் தாமோர் பாராட்டி வெகுமதி வழங்கினார். உடன் துணை ஆணையர் மகேஷ் குமார் ,(குற்றப்பிரிவு) சரவணன் ( சட்டம் & ஒழுங்கு) ஆகியோரும் காவலர்களை பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x