

ஓபிஎஸ்சை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுவந்த இசட் பிரிவு பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. திடீரென மத்திய அரசு இவ்வாறு செய்ததை துரைமுருகன், கனிமொழி ஆகியோர் கண்டித்துள்ளனர்.
ஸ்டாலின், சுப்ரமணியன் சுவாமி, ஓபிஎஸ் ஆகியோருக்கு இசட் பிரிவு எனப்படும் சிஆர்பிஎஃப் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தற்போது ஓபிஎஸ், ஸ்டாலின் ஆகியோருக்கு வழங்கப்படும் கமாண்டோ பாதுகாப்பை விலக்கிக் கொள்வதாக சிஆர்பிஎஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் தலைவர்களில் முக்கிய நபர்களுக்கு மத்திய கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்படுகிறது. முதல்வருக்குப் பாதுகாப்பு தர என்.எஸ்.ஜி எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படையான கருப்புப் பூனைப்படை 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே மொத்தம் 16 வி.வி.ஐ.பிக்களுக்கு மட்டுமே, என்எஸ்ஜி படையினரின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவருமான, முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதியும் இசட் பிளஸ் பாதுகாப்புக்கு உரியவர்களாக இருந்தார்கள்.
இதுதவிர எஸ்.எஸ்.ஜி என சிறப்பு பாதுகாப்புப் பிரிவு ஒன்றை ஜெயலலிதா உருவாக்கினார். தற்போது மத்திய உள்துறை அமைச்சரின் காஷ்மீருக்கான ஆலோசகராக இருக்கும் விஜயகுமார் இதற்குத் தலைமையேற்று வடிவமைத்தார். இது முழுக்க முழுக்க முதல்வருக்கான பாதுகாப்புக்காக, போலீஸில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வைத்து உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதா வைத்திருந்த எஸ்.எஸ்.ஜி படையை, கருணாநிதி முதல்வரான பின்னர் மாற்றி கோர்செல் எனப் பெயர் மாற்றம் செய்தார். பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா கோர்செல் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். கோர்செல் முழுக்க முழுக்க முதல்வர் பாதுகாப்புக்கானது. தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்தவகை பாதுகாப்பே உள்ளது.
தமிழகத்தில் 3 முக்கிய விஐபிக்களுக்கு இசட் பிரிவு எனப்படும் சிஆர்பிஎஃப் கமாண்டோ படை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. சுப்பிரமணியன் சுவாமி, ஸ்டாலின், ஓபிஎஸ் ஆகியோருக்கு அவ்வகை பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
சுப்பிரமணியன் சுவாமி. ஸ்டாலினுக்கு கமாண்டோ படை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் சிஆர்பிஎஃப் கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று ஓபிஎஸ்ஸுக்கு வழங்கப்படும் சிஆர்பிஎஃப் கமாண்டோ படை பாதுகாப்பு விலக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டு அதற்கான தகவலும் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. 10-ம் தேதி (இன்று)முதல் அவருக்கான பாதுகாப்பு விலக்கப்படுகிறது.
கமாண்டோ படை பாதுகாப்பை விலக்கும் முடிவை மத்திய அரசுதான் எடுக்கும். ஆனால் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அது நடக்க வாய்ப்பில்லை என்கின்றனர். ஓபிஎஸ்சுக்கு அளிக்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கப்பட்டதுபோல் ஸ்டாலினுக்கு பல ஆண்டுகளாக அளிக்கப்பட்டுவந்த இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தொடர் முடிந்த நிலையில் ஓய்வெடுக்க அந்தமான் சென்றார் ஸ்டாலின். அவருடன் பாதுகாப்புக்கு சிஆர்பிஎஃப் வீரர்களும் சென்றனர். இந்நிலையில் அவருக்கும் இன்றுமுதல் இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச்செயலை திமுக பொருளாளர் துரைமுருகன் கண்டித்துள்ளார். “திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது பாஜகவின் பழிதீர்க்கும் நடவடிக்கை” என திமுக பொருளாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகளிர் அணி செயலாளர் கனிமொழி, “திமுக தலைவர் அண்ணன் தளபதி அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த Z+பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழினத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தளபதி அவர்களுக்கு கோடிக்கணக்கான தொண்டர்களும்,அவர்களது அன்புமே அரணாக அமையும்” என ட்விட்டர் மூலம் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.