

கன்னியாகுமரியில் தமிழக- கேரள எல்லையில் சோதனைச் சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (58) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து தனிப்படை போலீஸார் திருநெல்வேலி பேட்டையிலுள்ள சீட் கவர் தயாரிப்பவர் வீட்டில் சோதனை நடத்தினர்.
வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து சோதனை சாவடிகளிலும் இரவோடு இரவாக போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் தலைமையிலான போலீஸார் கேடிசி நகர் நான்கு வழிச்சாலை, பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் சாலை, டக்கரம்மாள்புரம் நாகர்கோவில் சாலை, தாழையூத்து - மதுரை சாலை, பேட்டை தென்காசி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை சாவடிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் களியக்காவிளையிலிருந்து வந்த தனிப்படை போலீஸார் திருநெல்வேலி பேட்டை ரகுமான்பேட்டை 4-வது வடக்கு தெருவிலுள்ள சாகுல்ஹமீது (69) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
இவரது மகன் அல்கபீர் (28) டவுன் வழுக்கோடை பகுதியில் வாகனங்களுக்கு சீட் கவர் போடும் தொழில் செய்து வருகிறார். தனிப்படை போலீஸார் சோதனையிட்டபோது அல்கபீர் வீட்டில் இருக்கவில்லை.
அவர் எங்கு சென்றார் என்பது குறித்து தனிப்படை போலீஸார் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை காலை 6.30 மணிவரை நீடித்தது. அல்கபீரின் படிப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றை தனிப்படையினர் ஆய்வு செய்தனர். பின்னர் தனிப்படையினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.