Published : 09 Jan 2020 03:11 PM
Last Updated : 09 Jan 2020 03:11 PM

கன்னியாகுமரி எஸ்.ஐ.சுட்டுக்கொலை: கொலையாளிகள் யார்?- இரு மாநில டிஜிபிக்கள் நேரில் விசாரணை

கன்னியாகுமரியில் காரில் வந்த கும்பல் சோதனைச்சாவடியில் இருந்த எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளது. பரபரப்பான இந்த கொலைச் சம்பவத்தில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரது புகைப்படத்தை போலீஸ் வெளியிட்டுள்ளது. சம்பவ இடத்தில் கேரள, தமிழக டிஜிபிக்கள் நேரில் விசாரணை நடத்தினர்.

கன்னியாகுமரி கேரள எல்லையில் களியக்காவிளை சோதனைச் சாவடி உள்ளது. இங்கு இரு மாநில எல்லை வழியாக செல்லும் வாகனங்களை சோதனையிட்டு அனுமதி வழங்கப்படும். இந்தச் சோதனை சாவடி படந்தாலுமூடு என்கிற பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நேற்றிரவு சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பணியிலிருந்தார். அவ்வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துக்கொண்டிருந்தார்.

மற்ற போலீஸார் சோதனைச்சாவடியின் உள்ளே இருந்தனர். அப்போது கேரள எல்லையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த வாகனத்தில் வந்தவர்களில் இருவர் எஸ்.ஐ. வில்சன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் மார்பு, வயிறு, தொடையில் குண்டு பாய்ந்த வில்சன் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். சிகிச்சைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவத்தில் கொலையாளிகள் யார் என பல்வேறு ஊகங்கள், சந்தேகங்கள் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் கிடைத்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது இரண்டு இளைஞர்கள் வேகமாக ஓடுவதும், பின்னர் மற்றொரு இடத்தில் சிரித்தப்படி பேசிக்கொண்டு செல்வதும் பதிவாகியுள்ளது.

கொலை நடந்த இடத்தில் மாவட்ட எஸ்பி, மாவட்ட ஆட்சியர், தடயவியல் துறையினர் நேற்றிரவு நேரில் ஆய்வு செய்தனர். இன்று காலை தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஷ்வரன், கேரள போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் கேரள மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் வந்து விசாரணை நடத்தினார். அவர் சென்ற சிறிது நேரத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

முதற்கட்டமாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் முடுக்கிவிடப்பட்டன. போலீஸார் நடத்திய தீவிர வாகன சோதனையில் குமரிமாவட்டம் வழுக்கம்பாறை என்ற இடத்தில் பொம்மை துப்பாக்கி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொலை செய்த கும்பல் யார் ஏதாவது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களா? அவர்கள் ஏன் சோதனைச்சாவடியில் இருக்கும் வயதான உதவி ஆய்வாளரை சுட வேண்டும், சுட்டப்பின்னர் அவர்கள் பேசியபடி நடந்துச் செல்வதும், காரை ஓட்டியவர் தனியாக தப்பிச் சென்றதையும் பார்க்கும்போது இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.

திடீரென நடந்த கொலையாக இருந்தால் தப்பி ஓடியவர்கள் காரில் ஏறி தப்பிச் செல்லவே முயற்சிப்பார்கள், தனியாக இருவர் ஓடுவதும், பின்னர் சாவகாசமாக நடந்துச் செல்வதும் வேறு திட்டத்துடன் வந்துள்ளதாக போலீஸார் கருதுகின்றனர். தலையில் வெள்ளைக்குல்லாவுடன் ஓடுவதும் போலீஸ் விசாரணையை திசைத்திருப்ப செய்யும் முயற்சியாக இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

இதனிடையே போலீஸார் வெளியிட்டதாக இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் பெங்களூருவில் கியூபிராஞ்ச் போலீஸாரிடம் பிடிபட்ட 3 பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கும் கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் இந்தக்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவிக்கின்றனர். ஆனால் டிஜிபி நேரடியாக நடத்திய விசாரணையில் இருவர் புகைப்படம் குறித்து விசாரித்துள்ளார்.

இதுதவிர வேறு கோணங்களிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதைத்தவிர வேறு ஏதாவது காரணம் இருக்குமோ என்கிற ரீதியிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்ற வாகனம் இதுவரை பிடிபடவில்லை. அதன் நம்பர் பிளேட்டும் போலி என தெரியவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x