

கோவையில் சிறார் ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்து, பதிவிட்ட அஸ்ஸாம் இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்டம் சைபர் பிரிவின் சமூக ஊடகப் பிரிவில் சமூக வலைதளங்களை கண்காணித்தபோது ஒரு நபர் சிக்கியுள்ளார். அவரது கணக்கை போலீஸார் ஆராய்ந்தபோது ரெண்டா பாசுமாடரி என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் சிறார்களின் ஆபாச படங்களை பதிவிட்டு இருந்தது தெரியவந்தது.
அந்த நபர் பொள்ளாச்சியில் இருந்து ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக சமூக ஊடகப் பிரிவில் இருந்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்துபூர்வமாக புகார் அளிக்கப்பட்டது.
மேற்படி புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் 13,14(I),15 of POCSO ACT 2012 r/w. IT Act-ன் கீழ் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர்.
அந்த நபர் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள ஒரு தனியார் டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். அவரை கைது செய்து அவரிடமிருந்து கைபேசியை ஆய்வு செய்தபோது அந்த கைப்பேசியில் சிறார்களின் ஆபாச படங்கள் உட்பட பல ஆபாச படங்கள் இருந்துள்ளது. அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த நபரின் பெயர் ரெண்டா பாசுமாடரி (23), சொந்த ஊர் அஸ்ஸாம் என்பது தெரியவந்தது.
அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து பிழைப்புக்காக இங்கே வந்து தங்கி டைல்ஸ் கடையில் வேலை பார்ப்பதாக தெரிவித்துள்ளார். ஆபாச படம் பார்க்கும் பழக்கம் இருந்ததாகவும், தான் பார்க்கும் படங்களை பதிவிறக்கம் செய்து அதனை தனது முகநூலில் பதிவேற்றம் செய்தும், தனது நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையிலும், பேஸ்புக்கின் மெசஞ்சர் மூலமும் அனுப்பி வைத்ததை ஒப்புக்கொண்டார்.
அந்த அஸ்ஸாம் இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இவ்வாறான குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை வைத்திருப்போர் மற்றும் சமூக வலைதளங்களை பதிவு செய்பவர்கள் பற்றி விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
கூடிய விரைவில் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டப்படியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கோவை எஸ்பி சுஜித் குமார் எச்சரித்துள்ளார்.