

சென்னை சூளைமேட்டில் பெண் ஒருவர் பஜ்ஜி சாப்பிடும்போது தொண்டையில் சிக்கியதில், மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.
சென்னை, சூளைமேடு காமராஜர் தெருவில் வசிப்பவர் கங்காதரன் (48). இவரது மனைவி பத்மாவதி (45). இவர்களுக்குத் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. கங்காதரன் ராயப்பேட்டையில் உள்ள டூவீலர் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். பத்மாவதி தன் கணவருடன், தாயாரின் இல்லத்தில் வசித்து வந்தார்.
கங்காதரன் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் பத்மாவதி தனது தாயாருடன் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது பஜ்ஜி பத்மாவதியின் தொண்டையில் சிக்கியது. இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் அவருக்குத் தண்ணீர் கொடுத்தார்.
ஆனால், தண்ணீரை அருந்தும் நிலையில் அவர் இல்லை. மூச்சுக்குழலில் பஜ்ஜி அடைத்ததால் அவர் மயக்க நிலைக்குச் சென்றார். இதையடுத்து பத்மாவதியின் தாயார் அக்கம்பக்கத்தினரை அழைக்க, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. பத்மாவதியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரைப் பரிசோதித்தபோது ஏற்கெனவே பத்மாவதி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டது. பத்மாவதி உயிரிழப்பு குறித்து சூளைமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன் புது மாப்பிள்ளை ஒருவர், மனைவி ஊருக்குச் சென்றிருந்த நேரத்தில் அவருடன் செல்போனில் பேசிக்கொண்டே பரோட்டா சாப்பிட்டபோது தொண்டையில் பரோட்டா சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மாவுப்பொருட்களை உண்ணும்போது சிறிது சிறிதாக உண்ண வேண்டும். போன் பேசுவது, சத்தமாக பேசிச் சிரிப்பது, தண்ணீர் வைத்துக்கொள்ளாமல் சாப்பிடுவது போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும். உணவின் கெட்டித்தன்மை தொண்டையில் சிக்கும்போது மூச்சுக்குழலும் தொண்டையில் ஒரே பாதையில் இருப்பதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் நேரக் காரணமாக அமைகிறது.