கள்ளச்சாவிமூலம் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இளம்பெண்கள்:  சிசிடிவி கேமரா மூலம் பிடித்த உரிமையாளர்: ஒரு பெண் தப்பி  ஓட்டம்

கள்ளச்சாவிமூலம் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இளம்பெண்கள்:  சிசிடிவி கேமரா மூலம் பிடித்த உரிமையாளர்: ஒரு பெண் தப்பி  ஓட்டம்
Updated on
1 min read


சென்னை திருவல்லிக்கேணி எல்லிஸ் சாலை தாயர் சாகிப்பில் வசிப்பவர் யாசர் அரஃபாத்(26). இவர் வேலைக்குச் சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். தனது இருசக்கர வாகனத்தை வீட்டுக்கு அருகே அருகே எப்போதும் நிறுத்துவது வழக்கம். அதேபோல் நேற்றிரவும் அதே இடத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார்.

யாசர் அராஃபத் தனது வீட்டில் சிசிடிவி கேமராக்களை வைத்துள்ளார். அதை வீட்டில் உள்ள திரையில் அவர் பார்ப்பது வழக்கம். வீட்டுக்கு வந்த அவர் சாப்பிட்டு விட்டு ஓய்வாக சிசிடிவி கேமரா காட்சியை பார்த்தபோது அதிர்ந்துபோனார். அதில் தெரிந்த காட்சியில் வீட்டுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் அருகே இரண்டு இளம்பெண்கள் நிற்பது தெரிந்தது. பின்னர் இளம்பெண்கள் இருவரும் கள்ளச் சாவிபோட்டு வாகனத்தை திருட முயற்சி செய்வதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

என்னடா இது அதிசயமாக இருக்கு, ஆம்பிளைகள் தான் வண்டியை திருடுவார்கள், ஆனால் இளம்பெண்களே அதுபோன்ற காரியத்தில் ஈடுபடுகிறார்களே என அதிர்ச்சியடைந்த யாசிர் வெளியே சென்று இளம்பெண்களை பிடிக்க முயற்சி செய்துள்ளார். திடீரென வாகன உரிமையாளர் வந்தவுடன் அதில் ஒரு பெண் தப்பி ஓடிவிட்டார்.

மற்றொரு பெண்ணை யாசர் அராஃபத் பிடித்துக்கொண்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அந்தப்பெண்ணை பிடித்துக்கொண்டனர். பின்னர் அண்ணா சாலை போலீஸாருக்கு தகவல் அளிக்க அங்கு வந்த போலீஸாரிடம் அப்பெண்ணை ஒப்படைத்தனர்.

பிடிபட்ட பெண்ணிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் மோனிஷா(20)என்பதும் தப்பி ஓடிய தோழியின் பெயர் சந்தியா(19) என்பதும் தெரியவந்தது. இருவரும் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரியவந்தது. மோனிஷாவை கைது செய்த போலீஸார் தப்பியோடிய சந்தியாவை தேடி வருகின்றனர்.

இதுவரை பைக் திருட்டில் ஆண்களையே கண்ட போலீஸார் முதன்முறை பெண்கள் திருட்டில் ஈடுபட்டு சிக்கியதைக்கண்டு தலையில் அடித்துக்கொண்டனர். போதைப்பழக்கத்துக்கு ஆளானதால் செலவுக்காக வாகனத்தை திருட முயற்சித்ததாக மோனிஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in