கோலம் போட்டுக் கைதான பெண்களில் ஒருவர் பாகிஸ்தான் பத்திரிகையாளர் அமைப்புடன் தொடர்பில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றுகிறார் : காவல் ஆணையர் பேட்டி

கோலம் போட்டுக் கைதான பெண்களில் ஒருவர் பாகிஸ்தான் பத்திரிகையாளர் அமைப்புடன் தொடர்பில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றுகிறார் : காவல் ஆணையர் பேட்டி
Updated on
2 min read

கோலம் போட்டு எதிர்ப்புத் தெரிவித்துக் கைதான பெண்களில் ஒருவர் பாகிஸ்தான் பத்திரிகையாளர் அமைப்புடன் தொடர்பில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றுவதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை ஒட்டி செய்தியாளர்களை காவல் ஆணையர் தனது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது அவர் காவல்துறை கடந்த ஆண்டில் செய்த சாதனைகள் குறித்துப் பேசினார்.

காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அளித்த பேட்டி:

“2018 மே மாதத்திலிருந்து சிசிடிவி போட ஆரம்பித்தோம். அதன் பலனை 2019-ல் காண முடிந்தது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பிரதானமான செயின் பறிப்பு 2017-ல் 615 வழக்குகளாக இருந்தன. 2019-ல் 320 ஆகக் குறைந்தது. அதாவது 50 சதவீத செயின் பறிப்புக் குற்றங்கள் குறைந்துள்ளன.

ஆதாயக் கொலை, திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் முன்பிருந்ததைவிட பாதியாகக் குறைந்துள்ளன. அதற்கு சிசிடிவிதான் பிரதான காரணம். வெளிமாநிலக் கொள்ளையர்களைப் பிடித்து திருடு போன நகைகளை மீட்பதில் சிறப்பான முன்னேற்றம் நடந்துள்ளது.

சாலை விபத்துகள் பெருமளவு குறைந்துள்ளன. 932 சாலை விபத்துகள் குறைந்துள்ளன. உயிரிழப்புகள் குறைந்துள்ளன. இந்தியாவிலேயே பாதுகாப்பு மிகுந்த நகரமாக சென்னை உள்ளது.

காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு ஒன்றரை ஆண்டுக்கு முன் வந்தாலும் கடந்த ஒருமாதமாக காவல்துறையில் உள்ள அனைவரும் செய்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் காரணமாக ஏறத்தாழ 10 லட்சம் பேர் காவலன் செயலியை டவுன்லோட் செய்துள்ளனர்.

நிர்பயா திட்டத்தின் கீழ் 2000 முக்கிய இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைந்த இடங்களைக் கண்டறிந்து 6,500 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட உள்ளன. ரூ.113 கோடி செலவில் அது செயல்படுத்தப்பட உள்ளது. நிதி வந்துவிட்டது, பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. 25 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளோம்.

காயத்ரி கந்தாடே என்பவர் பைட்ஸ் ஃபார் ஆல் என்கிற பாகிஸ்தான் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிவதாக அவரது முகநூலில் போட்டுள்ளார். அதுவுமல்லாமல் அசோசியேஷன் ஆஃப் ஆல் பாகிஸ்தான் சிட்டிசன் ஜர்னலிஸ்ட் அவர்களுடைய அமைப்பைச் சேர்ந்த நிறுவனமாக உள்ளது. இது எந்த அளவுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பில் உள்ளது, இங்குள்ள சில அமைப்புகள் ஆதரவாகவும், தொடர்பிலும் இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

பாகிஸ்தான் தொடர்பு என்ன? இதுசம்பந்தமான வேறு தகவல் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்துவோம்.

கோலம் போட்டது குறித்து சில விளக்கங்களைச் சொல்ல விரும்புகிறேன். கோலம் போடும் போராட்டம் நடத்த உள்ளதாக அனுமதி கேட்டார்கள். நாம் அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் கோலம் போடுவதை போலீஸ் தடுக்கவில்லை. அவர்கள் ஏற்கெனவே ஏழெட்டு கோலம் போட்டுவிட்டார்கள்.

பொது இடங்கள், மற்றவர்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டார்கள். ஆனால், ஒரு வீட்டு முன் அங்கு ஏற்கெனவே போட்ட கோலத்தின் முன் நோ சிஏஏ என எழுதினர். அந்த வீட்டுக்காரர்கள் அவர்களிடம் எங்கள் அனுமதி இல்லாமல் எப்படி எழுதலாம் என்று கேட்க, அந்த வீட்டுக்காரர்களிடம் அவர்கள் தகராறு செய்தனர்.

நான் வீட்டு முன் போட்டால் என்ன? அது சாலைதானே? என்று தகராறு செய்கிறார்கள். இதுகுறித்த போலீஸுக்கு வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற போலீஸார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். அடுத்தவர் வீட்டு முன் அவர்கள் அனுமதி இல்லாமல் கோலம் போடுவது தவறு. கலைந்து செல்லுங்கள் என போலீஸார் கூறினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து போலீஸுக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, பின்னர் விடுவித்தோம். கோலம் போட்டதாக யாரையும் கைது செய்யவில்லை''.

இவ்வாறு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in