Published : 30 Dec 2019 09:56 PM
Last Updated : 30 Dec 2019 09:56 PM

புத்தாண்டுக்கொண்டாட்டம்: சென்னையில் 15000 போலீஸார் பாதுகாப்பு : பைக் ரேஸ் சென்றால் நடவடிக்கை

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு 15000 போலீஸார் சென்னையில் ஈடுபட உள்ளனர். 368 இடங்களில் வாகன தணிக்கை, பைக் ரேஸைத்தடுக்க சிறப்பு ஏற்பாடு என அமைதியான விபத்தில்லா புத்தாண்டுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“சென்னை பெருநகர காவல் துறையின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2020-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் நடைபெறுவதற்கு சென்னை பெருநகரகாவல்துறை அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளது. முக்கியமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு மக்கள் அதிகம் கூடும்இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 15,000 காவலர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை காவல் துறை ஏற்பாடு செய்துள்ளது. 31.12.2019 அன்று (செவ்வாய்கிழமை) இரவு 09.00 மணியிலிருந்து முக்கியமான இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு சென்னை, மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனிததோமையர் மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், அம்பத்தூர், அண்ணாநகர் மற்றும் புளியந்தோப்பு ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வேண்டிய உதவிகளை மேற்கொள்வார்கள். இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை,துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, சென்னை வெளிவட்ட சாலை ((Outer Ring Road) போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் தடுப்பு ((Bike Race) ) நடவடிக்கையாக 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 100 முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுதளங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை ஆகிய கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் ATV (All Terrain Vehicle)எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் பயன்படுத்தப்படும்.

மேலும் மணல் பகுதியிலும் போலீஸ் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும். மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் இது போன்று உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும். மேலும், அநேக இடங்களில்Drone Camera Mobile Surveillance Teamமூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படும்.

குற்றத் தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு Mobile Surveillance Team எனப்படும் குழுக்கள் அமைக்கப்பட்டு Tata ACE போன்ற வாகனங்களில் P.A. System, Flickering Light, போன்றவை பொருத்தி மக்கள் அதிகம் கூடும் மற்றும் வாகனம் அதிகம் சேரும் இடங்களில் உபயோகிக்கப்படும்.

கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையும், எச்சரிக்கை பதாகைகளும் பொருத்தப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக குதிரைப்படைகள் கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும்.

கடற்கரை மட்டுமில்லாமல் சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் ஒரு காவல் நிலையத்திற்கு 5லிருந்து 10 ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஒட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஒட்டுநர் உரிமம் ரத்து, செய்வது மட்டும் அல்லாது குற்ற ஆவண காப்பகத்தில் குற்றம் செய்தவரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு (Police Verification, Passport Verification, Visa Verification) போன்றவற்றின் போது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் மீது பதியப்பட்ட வழக்கு குறித்த தகவல்கள் இடம் பெறும் பட்சத்தில் தடையில்லாச்சான்று பெறுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை காவல் துறையினர் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து சென்னை மாநகர மக்கள் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாகவும், மற்றவர்களுக்கு சிரமமின்றி அமைய அனைத்து ஏற்பாடுகளையும்,செய்துள்ளது. எனவே, பொதுமக்கள் காவல் துறையினருடன் கைகோர்த்து 2020ம் ஆண்டு புத்தாண்டினை இனிதாக வரவேற்போம்”.

இவ்வாறு சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x