Published : 30 Dec 2019 08:25 PM
Last Updated : 30 Dec 2019 08:25 PM

புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

புத்தாண்டு தினத்தை பொதுமக்கள் சந்தோஷத்துடன் கொண்டாடும் வகையில் சென்னை கடற்கரைச் சாலை, எலியட்ஸ் கடற்கரைப் பகுதியில் வாகன போக்குவரத்து இரவு 8 மணிமுதல் மாற்றப்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் அறிவிப்பு:

“மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் புத்தாண்டு வரவை கொண்டாடுவதற்காக 31.12.2019, இரவு காமராஜர் சாலை மற்றும் பெசன்ட் நகர் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதை முன்னிட்டு,தடையில்லா வாகன போக்குவரத்து, விபத்தில்லா புத்தாண்டை உறுதிசெய்வதற்காக சென்னை போக்குவரத்து காவல் துறையினரால் கீழ்கண்டவாறு விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடற்கரை காமராஜர் சாலையிலும், ராஜாஜி சாலையிலும் செய்யப்பட உள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்:

1. கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள அனைத்து வழிகளும் 31.12.2019 அன்று இரவு 08.00 மணி முதல் சாலை தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு வாகனங்கள் கடற்கரை உட்புறச்சாலையில் நுழையாமல் தடைசெய்யப்படும்.

2. கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக வெளியே செல்வதற்கு இரவு 08.00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும். அதன் பிறகு கடற்கரை உட்புறச்சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அனைத்தும் கலங்கரை விளக்கத்திற்கு பின்புறம் மட்டுமே வெளியேற்றப்படும் .

3. காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவு சின்னம் வரையில் 31.12.2019 அன்று இரவு 08.00 மணி முதல் 01.01.2020 அன்று அதிகாலை 04.00 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

4. ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை மற்றும் வாலாஜா முனை சந்திப்பிலிருந்து போர் நினைவு சின்னம் நோக்கி வரும் வாகனங்கள் இரவு 08.00 மணி முதல் கொடிமர சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு அண்ணா சாலை சென்றடையலாம்.

5. அடையாரில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் கச்சேரி சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து கச்சேரி ரோடு, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மியூசிக் அகாடமி வழியாக அண்ணா சாலை சென்றடையலாம்.

6. காரணீஸ்வர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலையை நோக்கி செல்ல அனுமதிக்காமல் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும்.

7. எந்த வாகனங்களும் லூப்ரோடு வழியாக காமராஜர் சாலைக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது, சீனிவாசபுரம் சந்திப்பு வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்படும்.

8. டாக்டர் ராதாகிருஷ்னன் சாலை, லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலை, ஆடம்ஸ் சாலை, கொடிமரத்து சாலை, போர்நினைவு சின்னம் ஆகியவற்றிலிருந்து வரும் வாகனங்களை காமராஜர் சாலைக்கு இரவு 08.00 மணி முதல் அனுமதிக்கப்படமாட்டாது. அந்த வாகனங்களை கீழே குறிப்பிட்ட வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்திக்கொள்ளலாம்.

வாகன நிறுத்துமிடங்கள்

1. ராணி மேரி கல்லூரி வளாகம்

2. சுவாமி சிவானந்தா சாலை ஒருபுறம்.

3. ரயில்வே நிறுத்துமிடம் (ஆசுகூளு) சேப்பாக்கம்

4. ரயில்வே நிறுத்துமிடம் லாயிட்ஸ் சாலை

5. டாக்டர் பெசன்ட் சாலையில் ஓரு புறம்.

6. லாய்ட்ஸ் சாலையில் ஒரு புறம்.

எலியட்ஸ் கடற்கரையில் செய்யப்படஉள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்

பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள 6வது அவின்யுவில் 31.12.2019 இரவு 08.00 மணி முதல் 01.01.2020 அதிகாலை 04.00 மணி வரை எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படமாட்டாது.

1. பெசன்ட் நகர் 6வது அவின்யு இணைப்பு சாலைகளான 5வது அவின்யு, 4வது பிரதானசாலை, 3வது பிரதானசாலை, 16வது குறுக்குதெரு ஆகிய பகுதிகள் தடுக்கப்படும். மகாத்மா காந்தி சாலை, 7வது அவின்யு சந்திப்பில் இருந்து வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது .

வாகன நிறுத்துமிடங்கள்

1. பெசன்ட் நகர் 4ம் அவின்யு ஒருபுறம்.

2. பெசன்ட் நகர் 3வது பிரதான சாலை ஒருபுறம்.

3. பெசன்ட் நகர் 4வது பிரதான சாலை ஒருபுறம்.

4. பெசன்ட் நகர் 5ம் அவின்யு ஒருபுறம்.

5. பெசன்ட் நகர் 2ம் அவின்யு ஒருபுறம்.

6. பெசன்ட் நகர் 3ம் அவின்யு ஒருபுறம்.

இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் அனைவரும் இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைப்பு தருமாறு போக்குவரத்து போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x