Published : 30 Dec 2019 07:10 PM
Last Updated : 30 Dec 2019 07:10 PM

ஒட்டப்பிடாரத்தில் தேர்தல் வன்முறையில் ஒருவர் கொலை?- போலீஸ் தீவிர விசாரணை- 4 பேர் வெட்டுக்காயங்களுடன் சிகிச்சை

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே மேட்டு பச்சேரியில் ஒருவர் கற்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

உள்ளாட்சித் தேர்தல் மோதலில் அந்த நபர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து ஒட்டப்பிடாரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. ஒட்டப்பிடாரம் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு லதா, இளையராஜா, மணி ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் ட்டப்பிடாரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு பச்சேரியில் உள்ள யூனியன் பள்ளி வாக்குச்சாவடியில் இன்று மாலை 3 மணிக்கு மேல் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் லதாவின் கணவர் மாசான சாமி, அவரது சகோதரர் சோமசுந்தரம் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

அவர்களுக்கு ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனை அருகே பாளையங்கோட்டை செல்லும் சாலையோரம், கிழக்குத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் (என்ற) ரேஸ் வண்டி மாரியப்பன்(60) என்பவர் கற்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

தகவலறிந்து மணியாச்சி டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ஒட்டப்பிடாரம் நகர திமுக செயலாளர் பச்சை பெருமாள், அவரது மகன் ஜெய முருகன் ஆகியோர் வெட்டுக்காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாரியப்பன் உள்ளாட்சித் தேர்தல் மோதலில் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து ஒட்டப்பிடாரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x