

ராயப்பேட்டை, அகத்திமுத்தன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். வெளியூர் சென்றிருந்த இவர், திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஐஸ்அவுஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வி.ஜோதிலட்சுமி தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். மேலும், மோப்பநாய் அர்ஜுன் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் பயிற்சியாளரும், காவலருமான எஸ்.பிரபாகரன், மோப்பநாயை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றார்.
மோப்பநாய் அர்ஜுன் கொள்ளை நடந்த வீட்டின் படிக்கட்டு மேல் ஏறி பின்னர் வெளியே வந்து, அருகில் இருந்த மற்றொரு வீட்டின் முன் நின்றது. இதைத் தொடர்ந்து அந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
இதில், கொள்ளையில் ஈடுபட்டது அரும்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ்குமார்(24) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், கொள்ளையன் பிடிபட காரணமாக இருந்த மோப்பநாய் படை காவலர் பிரபாகரனை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.