நூதன முறையில் டயர் கடைக்காரரை ஏமாற்றிய 2 பேர்: ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள டயர்களுடன் மாயம்

நூதன முறையில் டயர் கடைக்காரரை ஏமாற்றிய 2 பேர்: ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள டயர்களுடன் மாயம்
Updated on
2 min read

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நூதன முறையில் டயர் கடை உரிமையாளரை ஏமாற்றி ரு.40 ஆயிரம் மதிப்பிலான டயர்களை எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையில் சந்திர பிரகாஷ் (55) என்பவர் டயர் கடை வைத்துள்ளார். நேற்று இவரது கடைக்கு டிப்டாப் உடையணிந்து இரண்டு பேர் வந்தனர். தாங்கள் வைத்துள்ள வாகனத்துக்கான டயரை மாற்ற வேண்டும் என்றனர். வாகனத்துக்கு 4 டயர் மற்றும் 4 டியூப் வேண்டும் எனக் கேட்டு வாங்கினர்.

அனைத்தும் முடிந்து பில் போடும் நேரத்தில் ஒருவர் பாக்கெட்டில் கைவிட்டுப் பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்டார். ''உடன் வந்தவர் என்ன விஷயம்'' எனக் கேட்க, ''பணம், ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு இருந்த பர்ஸை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன்'' என்று கூறியுள்ளார்.

வாகனத்துக்கும் உடனே டயரை மாற்ற வேண்டும், நேரம் ஆகிறது. மறுபடியும் வீட்டுக்குப் போய் பர்ஸை எடுத்துவர லேட்டாகும் என அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்.

இதைக் கேட்ட முதலாளி, ''சார் பில் எல்லாம் போட்டாச்சு. இப்போ என்ன செய்ய?'' என்று கேட்டுள்ளார். ''நாங்கள் போய் பர்ஸை எடுத்துக்கொண்டு வந்து வாங்கிக்கொள்கிறோம்'' என அவர்கள் கூற, திரும்ப வராமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் கடை முதலாளி சந்திர பிரகாஷ் திகைத்துள்ளார்.

நல்ல வியாபாரம் விடவும் கூடாது என முடிவெடுத்த சந்திர பிரகாஷ் யோசித்துக் கொண்டிருக்கும்போதே டயர்களை வாங்கிய நபரில் ஒருவர், ''கடை ஊழியரை எங்களுடன் அனுப்புங்கள். வீட்டுக்குப் போய் பணத்தைக் கொடுத்து அனுப்புகிறோம். உங்களுக்கும் வேலை முடியும், எங்களுக்கும் வேலை முடியும்'' எனக் கூறியுள்ளார்.

நல்ல யோசனையாக இருக்கே என்று நினைத்த முதலாளி, தனது கடை ஊழியர் சிவாவை அழைத்து டயர்கள் மற்றும் டியூப்களை எடுத்துக் கொடுத்தார். ''அவர்களுடன் போ, வீட்டுக்குப் போய் பணத்தை இந்தக் கையில் கொடுத்தவுடன் அந்தக் கையில் டயர்களைக் கொடுத்து விடு'' என இருசக்கர வாகனத்தில் கட்டி அனுப்பியுள்ளார்.

டயர் வாங்க வந்த இருவரும் சிவாவை அழைத்துக்கொண்டு கீழ்ப்பாக்கம் கல்லறை சாலையில் ஓர் அடுக்குமாடிக் கட்டிடம் அருகே தங்கள் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

''தம்பி. என்னுடன் மேலே வா பணம் தருகிறேன்'' என்று உடன் வந்தவரில் ஒருவர் சொல்ல, ''நான் உங்களுடன் வந்தால் டயரை யார் பார்த்துக் கொள்வது?'' என்று கடை ஊழியர் சிவா கேட்டார். ''அதான் என்னுடன் வந்தவர் இருக்காரே அவர் பார்த்துக்கொள்வார். நீ பணத்தை வாங்கியவுடன் அவரிடமே டயர், ட்யூபை கொடுத்துவிட்டுச் செல்'' என அவர் கூறியுள்ளார்.

அந்த யோசனையும் சிவாவுக்கு நல்லதாகப்பட்டது. ''நான் மேலே போய் பணத்தை ரெடி பண்ணிட்டுக் கூப்பிடுகிறேன்'' என்று சொல்லிவிட்டு அந்த நபர் மேலே சென்றுள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து கீழே உள்ள நபரை போனில் அழைத்து , கடைக்காரப் பையனை மேலே சொல்லி அனுப்பு என்றார். கீழே இருந்த சிவா, மேலே சென்று பார்த்ததில் அப்படி யாருமில்லை. அங்குள்ளவர்களிடம் விசாரித்தாலும் எந்தத் தகவலும் இல்லை.

தேடிப் பார்த்துவிட்டு அலுத்துப் போன கடை ஊழியர் சிவா, கீழே டயருடன் இருப்பவரைப் பார்த்துக் கேட்கலாம் என்று வந்தார். ஆனால், அங்கும் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கீழே நின்றிருந்த நபரையும் காணவில்லை. சிவாவின் வாகனத்தில் இருந்த டயர்கள் மற்றும் டியூப்களும் இல்லை.

தன்னை மேலே வரவழைப்பதுபோல் ஏமாற்றி இரண்டு பேரும் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள டயர், டியூப்களுடன் மாயமானது சிவாவுக்குப் புரிந்தது. மர்ம நபர்கள் இருவரும் நூதன முறையில் ஏமாற்றித் திருடிச் சென்றதை சிவா தாமதமாகவே தெரிந்துகொண்டார். இதுகுறித்து முதலாளி சந்திர பிரகாஷுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் டயர் கடை உரிமையாளர் சந்திர பிரகாஷ் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற போலீஸார் வழக்குப் பதிவு செய்து மோசடி நபர்களைத் தேடி வருகின்றனர். கடை இருக்குமிடம், கார்டன் சாலையில் கட்டிடத்தின் முன் ஏமாற்றிச் சென்ற இடங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

ஏமாறாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள போலீஸார் சில யோசனைகளைத் தெரிவித்துள்ளனர்.

* முதலில் கடையில் கண்காணிப்பு கேமராவைப் பொருத்த வேண்டும். பல லட்சம் மதிப்புள்ள டயர்களை வைத்து வியாபாரம் செய்யும் நபர் சில ஆயிரங்கள் செலவு செய்து சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவது அவசியம்.

* டிஜிட்டல் பணப் பரிமாற்றக் காலத்தில் பர்ஸை வீட்டில் வைத்துவிட்டேன் என்று சொன்னால் ஏமாறக் கூடாது. பணத்தைப் பரிமாற்றம் செய்ய பேடிஎம், மணிபே, கூகுள்பே போன்ற பல செயலிகள் உள்ளன. சாதாரண பெட்டிக்கடை, டீக்கடை, ஓலா, ஊபர் ஆட்டோ, கார்களில் இருக்கும் இந்த வசதியைப் பற்றி தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

இன்று இந்தச் செயலியை தனது செல்போனில் வைத்திருக்காத ஆளே இல்லை எனலாம். இதுபோன்ற நேரத்தில் அந்தச் செயலி மூலம் பணப் பரிமாற்றத்தை எளிதாகச் செய்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் விட்டதே இதுபோன்ற மோசடி நபர்களுக்கு வாய்ப்பாகிவிட்டது என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in