

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓட்டல் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் இன்று (திங்கள்கிழமை) கொலை செய்யப்பட்டார்.
சாத்தூர் தாயில்பட்டி அருகே உள்ள மடத்துப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (47). அப்பகுதியில் உள்ள ஓர் ஓட்டலில் பரோட்டா மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். குடிப்பழக்கம் உள்ள முத்துராஜ், அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்துவந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை இவர் மர்மமான முறையில் வீட்டின் முன் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதியினர் வெம்பக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் முத்துராஜ் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக முத்துராஜின் மனைவி தனலட்சுமி, மகன் அரவிந்த், மாமனார் கோபால்சாமி, மாமியார் விஜயலட்சுமி, மைத்துனர் சஞ்சீவி ஆகியோரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பப் பிரச்சினை காரணமாக முத்துராஜ் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருவகின்றனர்.