

இரண்டு நாட்களுக்கு முன் வேளச்சேரியில் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பச் சென்ற வேனின் ஓட்டுநர் வங்கிப் பணம் ரூ.52 லட்சத்துடன் மாயமானார். 2 நாளில் அவர் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்த போலீஸார், பணம் முழுவதையும் மீட்டுள்ளனர்.
வங்கிகளுக்குச் சொந்தமான ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியை தி.நகரில் உள்ள தனியார் நிறுவனம் செய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் ரூ.87 லட்சம் பணத்தை தி.நகர் அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொண்டு விஜயா வங்கி ஏடிஎம்மில் நிரப்பக் கொண்டு சென்றனர்.
வேனில் காவலாளி முகமது, ஊழியர்கள் வினோத் மற்றும் மற்றொரு வினோத் உட்பட 4 பேர் இருந்தனர். வேனை ஓட்டுநர் அம்புரோஸ் என்பவர் ஓட்டி வந்தார்.
சென்னை வேளச்சேரி விஜயா நகர் ஒன்றாவது பிரதான சாலையில் உள்ள விஜயா வங்கி ஏடிஎம் மையத்தில் பணத்தை நிரப்பச் சென்றனர். முதலில் தேனாம்பேட்டையில் இருந்த 5 ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பிவிட்டு வேளச்சேரி வந்தனர். காரில் இருந்த மூவரும் ஏடிஎம் மையத்திற்கு பணத்தை நிரப்பச் சென்றனர்.
காவலாளி முகமதுவும் அவர்களுக்குத் துணையாக ஏடிஎம் மையத்திற்குச் சென்றார். வேனில் ஓட்டுநர் அம்புரோஸ் மட்டும் இருந்தார். அப்போது லாரி ஒன்று வந்ததால் வேனை நகர்த்துவது போல் பாவனை செய்து, வேனை எடுத்துக்கொண்டு அம்புரோஸ் மாயமானார்.
வேனில் ரூ.52 லட்சம் பணம் இருந்தது. வேன் மாயமானதை அடுத்து வெளியில் வந்த ஊழியர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். பின்னர் போலீஸில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி போலீஸார் அம்புரோஸ் வீட்டு முகவரியைச் சோதித்தபோது அது போலி எனத் தெரியவந்தது.
ஆனாலும், அம்புரோஸ் மனைவி இருக்கும் இடத்தை போலீஸார் கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அம்புரோஸ் குறித்துத் தகவல் எதுவும் இல்லை. வேன் ஓட்டுநர் அம்புரோஸ் பணத்துடன் மாயமானாலும் அந்த வேன், ஆர்.கே.நகர் டாஸ்மாக் பார் முன் நின்றது தெரியவந்தது.
வேனை ஆய்வு செய்தபோது பணம் எதுவும் இல்லை. வேனை நிறுத்திவிட்டு அம்புரோஸ் பணத்துடன் மாயமானது தெரியவந்தது. அம்புரோஸைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
போலீஸார் அம்புரோஸின் மனைவி ராணியிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் ராணியின் சகோதரியின் வீட்டுக்கு அன்புரோஸ் வந்து சென்றது தெரியவந்தது. அவர் வீட்டிலிருந்து ஏடிஎம் மையத்தில் திருடப்பட்ட 52 லட்ச ரூபாயில் ரூ.32 லட்ச ரூபாயை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மீதமுள்ள 20 லட்சம் ரூபாயுடன் தலைமறைவான அம்புரோஸை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் அவரது செல்போன் எண்ணை ட்ரேஸ் செய்தபோது அம்புரோஸ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாமியார் வீட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வேளச்சேரி காவல் ஆய்வாளர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையிலான தனிப்படை போலீஸார் மன்னார்குடிக்கு விரைந்து அம்புரோஸைக் கைது செய்தனர். அவரிடமிருந்த ரூ.20 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தமாக திருடு போன ரூ.52 லட்சமும் மீட்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்புரோஸை இன்று சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.