Published : 21 Dec 2019 07:15 PM
Last Updated : 21 Dec 2019 07:15 PM

சென்னையில் போலி ஐஏஎஸ் அதிகாரி கைது 

சென்னை

ஆளுநரின் நேர்முக உதவியாளர் ஐஏஎஸ் அதிகாரி என்று சொல்லி பலரிடமும் கோடிக்கணக்கில் மோசடி செய்த நபரை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்தவர் சரோஜா. இவர் தன் தம்பிக்கு துறைமுகத்தில் வேலை வாங்கித் தரச் சொல்லி நல்லூரைச் சேர்ந்த சேஷய்யா, திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த தியாகராஜ், சென்னையைச் சேர்ந்த டேனியல் ராஜ் ஆகியோரை அணுகியுள்ளார்.

இவர்கள் மூவரும் குடியரசுத் துணைத் தலைவர், ஆளுநர் மற்றும் அரசியல் பிரமுகர்களின் பெயர்களைச் சொல்லி அவர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்டது போன்ற போலியான புகைப்படங்களைக் காட்டி தங்களை மிக முக்கியமான நபர்களாகக் காட்டிக் கொண்டனர். வேலை தேடும் நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து, லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்வதை இந்தக் கும்பல் வாடிக்கையாகச் செய்து வந்தது.

இதுகுறித்துத் தெரியாமல் சரோஜா தனது தம்பிக்கு வேலை வேண்டி மோசடி கும்பலை அணுகியுள்ளார். அவர்களும் தாங்கள் துறைமுகத்தில் இன்ஜினீயர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.13 லட்சத்தை வாங்கியுள்ளனர். துறைமுகத்தில் வேலை கிடைப்பதற்கு ஏற்பாடாகிவிட்டது என்று தெரிவித்து ஆளுநரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார் ஐஏஎஸ் உங்கள் தம்பியின் வேலைக்கு ஏற்பாடு செய்வார் எனத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குறிப்பிட்ட ஒருநாளில் ஹோட்டலில் நேர்காணல் என அறிவித்து சரோஜாவின் தம்பியை வரவழைத்துள்ளனர். அங்கு ஆளுநரின் நேர்முக உதவியாளர், ஐஏஎஸ் அதிகாரி என்கிற பந்தாவுடன் காரில் வந்து இறங்கியுள்ளார் விஜயகுமார். அவர் சென்னையைச் சேர்ந்த விஜயகுமார் (எ) டேனியல்ராஜ். அவர் சரோஜாவின் தம்பியின் சான்றிதழ்களை வாங்கி சரிபார்த்து போலியாக நேர்காணல் செய்துள்ளார்.

பின்னர் வேலை கிடைத்துவிடும் எனக்கூறி அந்தக் கும்பல் கம்பி நீட்டியுள்ளது. பல நாள் தேடியும் அந்தக் கும்பல் கிடைக்காமல் போக, சரோஜா காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இவ்வழக்கு மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஆளுநரின் ஆலோசகர் எனக் கூறி பணம் வாங்கி ஏமாற்றியவர் சென்னையைச் சேர்ந்த விஜயகுமார் (எ) டேனியல்ராஜ் என்பதும் அவரது கூட்டாளிகளே மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

விஜயகுமார் வேலை வாங்கித் தருவதாக பலரையும் ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. இவர் மீது ஏற்கெனவே பல மோசடி வழக்குகள் மத்திய குற்றப் பிரிவு நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து டேனியல் ராஜை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். மற்ற கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x