

மாநில ஆட்சிப் பணியில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரியில் தேர்வு குறித்த தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிப் பணித் தேர்வு மூலம் காவல் பணி, அரசுப் பணிக்குத் தேர்வு நடக்கிறது. இதில் அகில இந்திய அளவில் நடக்கும் தேர்வு தேசிய குடிமைப் பணித் தேர்வு என்று அழைக்கப்படுகிறது. யூபிஎஸ்சி என்று அழைக்கப்படும் இந்தத் தேர்வில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் எனப் பல பிரிவுகள் உண்டு.
இதேபோன்று மாநிலத்தில் ஆட்சிப் பணி, காவல் பணிகளுக்காக குரூப் -1 தேர்வு முக்கியமாகக் கருதப்படுகிறது. உதவி கமிஷனர், டிஎஸ்பி, உதவி ஆட்சியர் என்பன போன்ற பணிகளுக்காக குருப்-1 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு ஆட்சிப் பணி, காவல் பணியில் பணியாற்றும் இவர்கள் 15 ஆண்டுகளுக்குப் பின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்படுகின்றனர். ஆகவே மாநில அளவில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தற்போது குரூப் -1 தேர்வு அகில இந்திய குடிமைப்பணி (யூபிஎஸ்சி) தேர்வு போன்று அதே நடைமுறையில், அதே பாடத்திட்ட முறையில், அதே வடிவிலான கேள்வித்தாள் முறைகளில் நடப்பதால் இரண்டுக்குமான தேர்வை எழுதுவது எளிது என்கின்றனர்.
இதேபோன்று மாநிலப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வு, குரூப்-4 தேர்வுகளுக்கும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் தேர்வுத் தேதியும் அறிவிக்கப்படும்.
குரூப்-1க்கான தேர்வுத் தேதி ஜனவரி மாதம் வெளியிடப்படும். ஜனவரி மாதத்திலிருந்து 60 முதல் 80 நாட்கள் இடைவெளியில் நடப்பதுபோன்று தேர்வு அறிவிக்கப்படும்.
குரூப்-2 தேர்வுக்கான தேதி மே மாதம் அறிவிக்கப்படுகிறது, குரூப்-4க்கான தேர்வுத் தேதி செப்டம்பரில் அறிவிக்கப்படுகிறது. தேதி அறிவிக்கப்படும் நாளிலிருந்து 60 முதல் 80 நாட்கள் தள்ளியே தேர்வுத் தேதி இருக்கும்.