Published : 21 Dec 2019 01:09 PM
Last Updated : 21 Dec 2019 01:09 PM

அண்ணா சாலையில் கவிழ்ந்த இருசக்கர வாகனம்: பேருந்தில் சிக்கி கணவருடன் சென்ற பெண் பலி

அண்ணா சாலையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், பின்னால் வந்த பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.

தி.நகர், கிரி சாலையில் வசிப்பவர் சூரிய நாராயணன்(62). இவரது மனைவி எழிலரசி (59). நேற்று மதியம் இவர் தனது கணவருடன் வெளியில் சென்றுவிட்டு அண்ணா சாலை டிவிஎஸ் வழியாக தி.நகருக்கு ஜெமினி பாலம் நோக்கி, சென்று கொண்டிருந்தார்.

இருசக்கர வாகனத்தை கணவர் சூரியநாராயணன் ஓட்டிச் செல்ல பின்னால் எழிலரசி அமர்ந்திருந்தார். சூரிய நாராயணன் ஹெல்மட் அணிந்திருந்தார். மதியம் சர்ச் பார்க் பள்ளி அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே சூரிய நாராயணன் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற கார் ஒன்றை சூரிய நாரயணன் முந்த முயன்றார். பக்கத்தில் வண்டலூர் நோக்கிச் செல்லும் E18 பேருந்து வந்து கொண்டிருந்தது.

காரை முந்த முயன்றபோது வந்த குழப்பத்தில் சூரிய நாராயணன் பிரேக் பிடிக்க, திடீரென சாலையில் வாகனத்துடன் தவறி விழுந்தார். இதில் எழிலரசி வலதுபுறம் விழுந்தார். அப்போது வலதுபுறம் வந்த அரசுப்பேருந்து அவர் மீது ஏறியது. இதில் அரசுப்பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி எழிலரசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கணவர் சூரிய நாராயணனுக்கு லேசான சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன. விபத்து குறித்து தகவல் அறிந்துவந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் எழிலரசி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய E18 அரசுப் பேருந்து ஓட்டுநர் திண்டிவனத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(40) கைது செய்யப்பட்டார் . விபத்து குறித்து ஐபிசி பிரிவு 279 (பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டுதல்) 304(எ) (அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பொதுவாக பெரிய சாலைகளில் செல்வோர் குறிப்பாக பெண்களைப் பின்னால் அமர்த்திக்கொண்டு பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் இடதுபுறம் மிதமான வேகத்தில் செல்வது பாதுகாப்பான பயணத்திற்குச் சிறந்தது. சாலையின் நடுவில் அல்லது வலதுபுறம் செல்வது, பெரிய வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது அவர்கள் வாகனத்தின் பிரேக் பிடிக்கும் அளவுக்கு இருசக்கர வாகனங்கள் பிரேக் இருக்க வாய்ப்பில்லை.இதனால் சாலையில் விழ நேரிடும். இருசக்கர வாகனங்கள் எப்போதும் இடதுபுறம் பயணிப்பதே பாதுகாப்பான பயணம்.

மனித உயிர் மதிப்பு வாய்ந்தது. உயிரிழக்கும் ஒவ்வொருவரும் அவரது குடும்பத்தினருக்கு மிகவும் அவசியமான ஒருவராக இருப்பர். சில நிமிடங்கள் தாமதமாகச் சென்றாலும் பாதுகாப்பு முக்கியம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x