Published : 20 Dec 2019 06:53 PM
Last Updated : 20 Dec 2019 06:53 PM

எருமை மாடுமீது மோட்டார் பைக் மோதியதில் கல்லூரி மாணவர் பலி: இருவேறு விபத்துகளில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

சென்னை ஆவடி பூந்தமல்லி சாலை மற்றும் அயனம்பாக்கத்தில் இருவேறு விபத்துகளில் முறையே மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் , இளைஞர் ஒருவர் உயிரிழந்தனர்.

அயனம்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மதன்ராஜ்(27) என்பவர் அதிக வேகத்தில் சென்றுள்ளார். இதில் முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் அடித்துள்ளது. இதனால் வேகமாகச் சென்ற பைக் லாரி மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் பிடித்தபோது வாகனம் சறுக்கி கீழே விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆவடி தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வசிப்பவர் சுப்ரமணி(48). இவரது மகன் அஜய்(18). போரூர் ஆல்பா கல்லூரில் BCA இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தனது நண்பர் வெளியூரிலிருந்து விமானம் மூலம் சென்னை வருவதை அடுத்து அவரை வரவேற்க ஹெல்மெட் அணிந்து தனது இருசக்கர வாகனத்தில் தனது நண்பரை விமானநிலையத்தில் இருந்து அழைத்து வர சென்றவர் பூந்தமல்லி சாலை வீரராகவபுரம், துலுக்காணத்தம்மன் கோவில் அருகில் செல்லும்போது திடீரென சாலையின் குறுக்கே எருமை மாடு ஒன்று வந்துள்ளது.

வேகமாக வந்த அஜய் அதன் மீது மோதி கீழே விழுந்ததில் மார்பு மற்றும் இடது காலில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரண்டு விபத்துக்குறித்தும் தகவல் அறிந்து சம்பவ இடங்களுக்கு சென்ற பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் அஜய் உயிரிழந்தது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் ஐபிசி பிரிவு 279(பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்குதல்), 304 (A)( உயிரிழப்பு ஏற்படும் என தெரிந்தும் அஜாக்கிரதையாக இருந்து மரணம் ஏற்பட காரணமாக இருத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து எருமைமாட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x