

திருச்சி சமயபுரம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணமடைந்த விவகாரம் குறித்து மாநில மனித உரிமை ஆணைய டிஜிபி விசாரணை செய்ய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 13-ம் தேதி திருச்சி சமயபுரம் அருகே பழைய பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த திருச்சி இ.பி.ரோட்டைச் சேர்ந்த முருகன் (55), அவரது மகன் வீரபாண்டி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது வழிப்பறி வழக்குத் தொடர்பாக முருகனை அழைத்துச் சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர். கடந்த 15-ம் தேதி மர்மமான முறையில் முருகன் இறந்தார். ஆனால், காவல்துறை பிடியிலிருந்து தப்பி ஓடியபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக காவல்துறை தெரிவித்தது. முருகனை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று மரணத்திற்குக் காரணமாக இருந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
சமயபுரம் போலீஸ் உதவி ஆய்வாளர் செந்தில், ஏட்டு விஜயகுமார், காவலர் நல்லேந்திரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இது தொடர்பாக வெளியான பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரான நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
காவல்துறை விசாரணையில் முருகன் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென மனித உரிமை ஆணையத்தின் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.