Published : 19 Dec 2019 08:12 PM
Last Updated : 19 Dec 2019 08:12 PM

தலைமைச் செயலகம், முதல்வர் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது: உறவினரைப் பழிவாங்க நினைத்தவர் சிக்கினார்

தலைமைச் செயலகம், முதல்வர் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டார். உறவினரைப் பழிவாங்க நினைத்தவர் சிக்கினார்.

தலைமைச் செயலகம், ஓபிஎஸ், ஈபிஎஸ் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். உறவினரைப் பழிவாங்க நினைத்து, அவரே சிக்கினார்.

சென்னை எழும்பூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் காவலரிடம் பேசிய பெண், ''இரவு 8 மணிக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலகக் கட்டிடத்தில் வெடிகுண்டு வெடிக்கும்.

தமிழக முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது வீடுகளிலும் குண்டு வெடிக்கும். கோவையில் பார்வதி என்பவர் மனித வெடிகுண்டுகளை இதற்காக வைத்துள்ளார்'' எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

இதைத் தொடர்ந்து அழைப்பு வந்த செல்போன் எண்ணை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, அந்த அழைப்பு கோவை செட்டிபாளையம் அருகேயிருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சென்னை போலீஸார் கோவை மாவட்ட போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உடனடியாக களத்தில் இறங்க, செட்டிபாளையம் போலீஸார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்ணைப் பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் போத்தனூர் செட்டிபாளையம் கலைஞர் நகரைச் சேர்ந்த சகுந்தலா (42) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். போலீஸார் விசாரணையில், செட்டிபாளையம் கலைஞர் நகரைச் சேர்ந்த சகுந்தலா, அவரது சகோதரரிடம் ரூ.1.5 லட்சம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் போத்தனூரில் வசிக்கும் உறவினர் பார்வதி (50) என்பவரை வாங்கித் தரும்படி கூறியுள்ளார். அவரும் மறுத்துள்ளார்.

இதனால் பார்வதி மீது கடும் ஆத்திரமடைந்த சகுந்தலா, அவரைச் சிக்க வைக்கவும், பழிவாங்கவும் முடிவு செய்துள்ளார். தன் செல்போன் மூலம் சென்னை காவல்துறையைத் தொடர்பு கொண்டு, பார்வதி பேசுவதாகக் கூறி அவரது பெயர், முகவரியைக் கூறி வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். பார்வதி வீட்டில் மனித வெடிகுண்டு ஆட்களை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

போலீஸார் சகுந்தலாவைக் கைது செய்ததை அடுத்து பார்வதி அளித்த புகாரின் பேரில் 294(b) (அவதூறாகப் பேசுதல்), 505(1) (b) (பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் செயலைச் செய்தல்) 506 (1) (கொலை மிரட்டல்) உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் சகுந்தலாவைக் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x