Published : 17 Dec 2019 02:59 PM
Last Updated : 17 Dec 2019 02:59 PM

கட்டிட உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு: திமுக எம்எல்ஏ சேகர் பாபு உள்ளிட்ட 8 பேர் மீது மோசடிப் பிரிவில் வழக்குப் பதிவு

வாடகைக்குக் குடியிருந்தவருக்கு ஆதரவாகக் கட்டிடத்தைக் காலி செய்ய, கட்டிட உரிமையாளரை மிரட்டிப் பணம் பறித்ததாக திமுக எம்.எல்.ஏ சேகர்பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் மீது யானைக்கவுனி போலீஸார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

“பெரியமேடு, சைடன்ஹாம்ஸ் சாலையில் வசிக்கும் ராஜ்குமார் (49), என்பவர் தனது தொழில் கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதி, செளகார் பேட்டை, மின்ட் தெருவில் உள்ள சொத்து ஒன்றை உயர் நீதிமன்ற ஏலத்தின் மூலம் எடுத்துள்ளார்.

அதில் வசித்த 12 குடித்தனக்காரர்களுக்கு ரூ.25 லட்சம் கொடுத்துக் காலி செய்துள்ளார். அந்தக் கட்டிடத்தில் கன்பாத்லால் பாபேல் (58) என்பவர் பாயஸ் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் வாடகைக்குக் கடை நடத்தி வந்ததாகவும், அவருக்குக் கடையைக் காலி செய்வதற்கு ரூ.25 லட்சமும் பேசியுள்ளார். அதனை கடந்த ஜூன் 19-ம் தேதி ராஜ்குமார் கொடுத்துள்ளார்.

ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட கன்பாத்லால், கடையைக் காலி செய்யமால், பூட்டி விட்டுச் சென்றார். அதனால் ஏற்பட்ட பிரச்சினை துறைமுகம் பகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சேகர்பாபுவிடம் பஞ்சாயத்தாகச் சென்றுள்ளது. சேகர் பாபுவின் சட்டப்பேரவை அலுவலகத்தில் சேகர் பாபு மற்றும் அவருடன் இருப்பவர்கள் கடந்த ஜூன் 28-ம் தேதி அழைத்து பஞ்சாயத்து பேசியுள்ளனர்.

அப்போது சேகர்பாபு தன்னை மிரட்டி ரூ.1 கோடி பேரம் பேசி ரூ.35 லட்சம் பெற்றுக் கொண்டதாகவும், மீதம் ரூ.65 லட்சம் கேட்டு தன்னைத் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் நீதிமன்றத்தில் ராஜ்குமார் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து துறைமுகம் சட்டப்பேரவை உறுப்பினர் 1.சேகர்பாபு , 2. கன்பத்லால் பாபேல் (58), 3. அங்கித் பாபேல் (35), 4. சந்துரு (45), 5.சரவணன் (45), 6. K.S.நடராஜன் (46), 7. மகேந்திர ரன்கா (50), 8. தர்மேஷ் லோடா ஆகியோர் மீது ஐபிசி பிரிவு 385 (பயமுறுத்துதல், காயம் ஏற்படுத்துதல்), 386, 387, 389 (உயிர் பயத்தை ஏற்படுத்தும் விதத்தில் அச்சுறுத்துதல்), 395 (கூட்டுக்கொள்ளை), 420 (நம்பிக்கை மோசடி), 506 (ii) (ஆயுதத்துடன் கொலை மிரட்டல்) r/w.34 (கூட்டாக குற்றச்செயல் புரிதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்”.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x