சென்னையில் சுவாரஸ்யம்: போராட்ட களத்தை ‘காவலன் செயலி’-யின் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திய  போலீஸ் எஸ்.ஐ

படங்கள்: எல்.சீனிவாசன்
படங்கள்: எல்.சீனிவாசன்
Updated on
2 min read

சென்னையில் ஆர்ப்பாட்டத்துக்கு பாதுகாப்புக்கு வந்த காவல் எஸ்.ஐ. ஒருவர் திடீரென காவலன் செயலி குறித்த விழ்ப்புணர்வு பிரச்சாரத்துக்கு அந்த ஆர்ப்பாட்டத்தை பயன்படுத்திக்கொண்டார். அதை அனைவரும் பாராட்டினர்.

பொதுவாக போராட்டக்களத்தில் கோஷம் பிரச்சாரம் இருக்கும், பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் கவனிப்பார்கள், சில நேரம் போராட்டக்காரர்கள், போலீஸார் தள்ளுமுள்ளு கூட நடக்கும். போராட்டம், ஆர்ப்பாட்டம் நடக்கும் இடங்களில் அதன் நோக்கம் குறித்து ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்குபவர்கள் போலீஸ் அனுமதி பெற்று மைக் செட் வைத்து விளக்கி பேசுவார்கள்.

இதுபோன்ற ஒரு ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கத்தில் வழக்கமாக நடக்கும் இடத்தில் நடந்தது. வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜிஎஸ்டி 2 மடங்காக ஏற்றப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வெள்ளையன் உள்ளிட்ட வணிகர் சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு திருவல்லிக்கேணி போலீஸார் க்ரைம் இன்ஸ்பெக்டர் சீதாராமன் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது க்ரைம் இன்ஸ்பெக்டர் சீத்தாராமனும், எஸ்.ஐ மருதுவும் வணிகர் சங்க நிர்வாகிகளிடம் ஒரு கோரிக்கை வைத்தனர். அதைக்கேட்ட அவர்கள் தாராளமாக செய்யுங்கள் என அனுமதி அளித்தனர்.

இதையடுத்து எஸ்.ஐ. மருது மைக்கை பிடித்தார். போராட்டக்காரர்கள் பேச வேண்டிய மைக்கில் எஸ்.ஐ பேசப்போகிறாரே என்ன பேசப்போகிறார் என அக்கம் பக்கத்தினர் வியப்போடு பார்த்தனர். அவருடன் க்ரைம் இன்ஸ்பெக்டர் சீதாராமனும் இணைந்து நிற்க மைக்கில் மருது பேச ஆரம்பித்தார். காவலன் செயலி குறித்து அவர் விளக்கி பேசினார்.

இன்றைய சூழலில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் அதற்காக காவல்துறை என்னென்ன முயற்சிகள் எடுக்கிறார்கள், அதன் ஒரு பகுதியாக காவலன் செயலியின் உபயோகம் அதை அனைவரும் தரவிறக்கம் செய்வதன் அவசியம் குறித்து பேசினார். அதை ஆர்ப்பாட்டத்துக்கு வந்த வணிகர் சங்கத்தினரும் பொதுமக்களும் ரசித்தனர்.

பின்னர் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினார். அப்போது வணிகர் சங்க நிர்வாகி போலீஸ் ஸ்டேஷனுக்கு நாங்கள் போனால் என ஆரம்பிக்க மற்ற நிர்வாகிகள் உட்காருங்கள், அவர்கள் ஒரு செயலி பெண்களுக்கு எப்படி பாதுகாப்பாக இருக்கிறது என்பதை விளக்கி உதவி செய்கிறார்கள் என அமர்த்தினர்.

காவலன் செயலியை பொதுமக்கள் குறிப்பாக பெண்களிடம் கொண்டுச் சேர்க்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பெரு முயற்சி எடுத்து வருவதன் மூலம் இதுவரை சென்னையில் 1 லட்சத்து 70 ஆயிரம்பேர் வரை தரவிறக்கம் செய்துள்ளனர். ஆணையர் எவ்வழி அனைவரும் அவ்வழி என போலீஸாரும் இதில் ஆர்வமாக இறங்குவதன் வெளிப்பாடே எஸ்.ஐ. மருது விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததது எனலாம்.

இது குறித்து டி.1 திருவல்லிக்கேணி க்ரைம் இன்ஸ்பெக்டர் சீத்தாராமனிடமும், எஸ்.ஐ.மருதுவிடமும் இந்து தமிழ் இணையதளம் சார்பில் வாழ்த்துச் சொல்லி பின்னர் கேட்டபோது அவர் கூறியது:

காவல் ஆணையர் இந்த செயலியை பொதுமக்களிடம் சேர்க்க முனைப்பு காட்டுகிறார், இதுபோன்று ஆர்ப்பாட்டத்தில் பிரச்சாரம் செய்ய உங்களுக்கு எப்படி தோன்றியது?

இன்ஸ்பெக்டர் சீத்தாராமன்:

“ இந்தச் செயலியை பொதுமக்களிடம் கொண்டுச் சேர்க்க காவல் ஆணையர் பெருமுயற்சி எடுக்கிறார், காவல் பணி சமுதாயப்பணி அதன் வெளிப்பாடே நாங்கள் செய்தது” என்று தெரிவித்தார்.

எஸ்.ஐ. மருது :

“தமிழகம் முழுதும் ஒரு இடத்தில் கூடுவது என்று பார்த்தால் சேப்பாக்கத்தில் உள்ள இந்த ஆர்ப்பாட்டம் நடத்தும் இடம் என்று சொல்லலாம். இங்கு வருபவர்கள் அந்த இயக்கத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் வருவார்கள். அதனால் அவர்களிடம் சில நிமிடங்கள் பிரச்சாரம் செய்வதன் மூலம் தமிழகம் முழுதும் அவர்கள் அதை எடுத்துச் செல்வார்கள், அவர்கள் குடும்பத்தில் அதை தரவிறக்கம் செய்ய வலியுறுத்துவார்கள் எனத் தோன்றியது.

அதை எங்கள் ஆய்வாளர் சீதாராமனிடம் சொன்னவுடன் அனுமதித்து அவரே செயல் விளக்கம் செய்தும் காண்பித்தார். காவல் துறையில் ஒரு சிறுதுளியாய் எனது பங்களிப்பைச் செய்தேன் அவ்வளவுதான்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in