

ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்க சென்றபோது வீரமரணம் அடைந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டில் சென்னை கொளத்தூரில் முகேஷ் என்பவர் நகை கடையில் கொள்ளையடித்த நாதுராம் உள்ளிட்ட கொள்ளையர்கள் ராஜஸ்தான் தப்பிச் சென்றனர். அவர்களைப் பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் தலைமையில் போலீஸார் ராஜஸ்தான் சென்றனர். இதே நாளில் அதிகாலையில் நாதுராமை பிடிக்க செங்கல் சூளையில் ரவுண்டப் செய்து மடக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் குண்டடிப்பட்டு பெரிய பாண்டியன் உயிரிழந்தார்.
தமிழகம் முழுதும் அதிர்வலையை ஏற்படுத்திய பெரியபாண்டியன் மரணத்துக்கு நாடே அஞ்சலி செலுத்தியது. பெரிய பாண்டியன் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தலைமையக கூடுதல் ஆணையர் ஜெயராம் உள்ளிட்ட அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய ஏ.கே.விஸ்வநாதன், ஆய்வாளர் பெரியபாண்டியன் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
காவல் ஆணையர் தலைமையில், காவல் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், மறைந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் காவல் அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் மறைந்த காவல் ஆய்வாளரின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.